அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவுவதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட கோலா கரடிகளை விற்று ஆறு வயதான சிறுவனான ஓவன் கோலி 250,000 டொலர்கள் நிதி திரட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய காட்டுத்தீ உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பாரிய காட்டுத் தீ கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் பரவத்தொடங்கியது. 

இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை தீ அழித்துவிட்டது. குறித்த தீ விபத்தில் மிகவும் துன்பகரமான  சம்பவம்  என்னவென்றால் ஒரு பில்லியன் விலங்குகள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல விலங்கு பிரியர்களைப் போலவே, அமெரிக்காவின்  மாசசூசெட் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயதான ஓவன் கோலி என்ற சிறுவன் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட உயிரினங்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினான்.

சிறுவனும் அவரது குடும்பத்தினரும் களிமண்ணில் கோலா கரடிகளை தயாரித்து விற்பனை செய்வதற்கான ஆக்கபூர்வமான யோசனையில் இறங்கி இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளார்கள்.

ஓவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வனவிலங்கு மீட்புக்காக 250,000 டொலர்களுக்கு மேல் நிதி திரட்டியுள்ளார்கள்.

மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இடம்பெயர்ந்த விலங்குகளுக்கு தங்குமிடம் கட்டவும்,  உணவு நிலையங்களை அமைக்கவும் இந்த பணம் உதவும், எனவே வீடுகள் இல்லாத விலங்குகள்  எங்காவது பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.