(செ.தேன்மொழி)

அம்பன்பொல பகுதியில் கல்கமுவ சிறைச்சாலையிலிருந்து சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பன்பொல - கலுவிலபதான பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவையிலிருந்து மாஹவ சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி வந்த பஸ் மீது பின்னோக்கியவாறு பிரதான வீதிக்கு வந்த லொறி மோதியுள்ளது. பின்னர் அந்த பஸ் அருகிலிருந்த மண்மேட்டின் மீது மோதி தரம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி உட்பட சிறைக் காவலர்கள் மூன்று பேரும் , கைதிகள் ஒன்பது பேரும் காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் அவரை இன்றைய தினம் மாஹவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.