நிர்பாய விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் தங்களின் இறுதி ஆசை என்னவென்பது குறித்து  தெரிவிக்க மறுத்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் நால்வரும் தங்கள் இறுதி ஆசை என்னவென்பது குறித்து தெரிவிக்க மறுக்கின்றனர் என திகார் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்கள் குடும்பத்தவர்களை இறுதியாக பார்ப்பதற்கான விருப்பத்தை அவர்கள் வெளியிடவில்லை அதேபோன்று தங்கள் சொத்துக்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என திகார் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மரணதண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் இறுதியாக தாங்கள் விரும்பும் குடும்ப உறுப்பினரை பார்ப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குற்றவாளிகள் தங்கள் சொத்துக்கள் குறித்த தங்கள் இறுதி விருப்பத்தையும் வெளியிடலாம்.

எனினும் முகேஸ் சிங் ,வினய் சர்மா,அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகிய  குற்றவாளிகளும் இந்த விடயங்கள் குறித்து மௌனமாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தள்ளிப்போட முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளதை இது வெளிப்படுத்துகின்றது எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இறுதி நேரத்தில்  குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுகாரணமாக தூக்குதண்டனை நிறைவேற்றம் முதலாம் திகதியே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிர்பாயவின் பெற்றோர்கள் உட்பட பலர் தண்டனை நிறைவேற்றம் தாமதமாவதை கண்டித்துள்ளனர்.