தொடர்சியாக விவசாயிகள் வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் இருந்து விவசாய மக்கள் இனியும் பாதிப்படையாத வகையில் நெல் கொள்முதலுக்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய தரத்துடனான நெல் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும் உலராத தன்மையுடைய நெல் ஒரு கிலோ 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் ஈரப்பதன் குறைவாக உள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 50 ரூபாவையும் ஈரப்பதன் அதிகமாகவுள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 45 ரூபாவையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது  என அமைச்சரவை  பேச்சாளர்  பந்துல  குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க  தகவல்  திணைக்களத்தில் நேற்று   வியாழக்கிழமை இடம் பெற்ற  அமைச்சரவை  தீர்மானங்களை   அறிவிக்கும்  ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேசிய  உற்பத்திகளை ஊக்கப்படுத்தி   தானிய  இறக்குமதி வீதத்தை குறைப்பதே   அரசாங்கத்தின் பிரதான  எதிர்பார்ப்பாகும்.  உள்ளுர் உற்பத்திகளை வலுப்படுத்த உற்பத்தியாளர்களுக்கு வரிச்சலுகை  வழங்கப்பட்டுள்ளதுடன்,  பல  நிவாரணங்களும் வழங்க்கப்பட்டுள்ளன.

2019  மற்றும்  2020ம்ஆண்டுக்கான  பெரும்போக    அறுவடை  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இம்முறை 3மில்லியன் மெற்றிக் தொன் அளவில்  அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரிசி விலை  ஓரளவு    அதிகரித்திருந்த போதில்  சுமார் 100  மில்லியன்  அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு ஆதாயமாக  பெறமுடிந்துள்ளது.   இந்நிலை   வெளிநாட்டு  நாணய விகிதத்தின் ஸ்தீரத்தன்மையினை போன்று   வட்டி வீதத்தையும் குறைப்பதற்கான   காரணியாகவும்   காணப்படுகின்றன.

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் ஈரப்பதன் குறைவாக உள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 50 ரூபாவையும் ஈரப்பதன் அதிகமாகவுள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 45 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை நிர்ணயத்திற்கு மேலதிகமான  விலை நிர்ணயித்து   விற்பனை  செய்யும்   வியாபாரிகளுக்கு  எதிரான    கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  அவ்விடயம் தொடர்பில் ஆராய கண்காணிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு  தரப்பினரும் ,  நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் நெல்லை   கொள்வனவு செய்யும்   திட்டத்தை  மாவட்ட செயலாளர்கள் ,  அரசாங்க அதிபர்கள் மற்றும்  நெல் சந்தைப்படுத்தல்  மூலம் நடைமுறைப்படுத்தும்   முப்படை,  சிறைச்சாலை  திணைக்களம்,  வைத்தியசாலை உள்ளிட்ட  அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு தேவையான   அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என்றார்.