இஸ்ரேலிய டெல் அவிவ் நகரில்  அந்நாட்டு இராணுவ தலைமையகத்துக்கு அருகிலுள்ள சரோனா சந்தையில் புதன்கிழமை இரவு   இரு பலஸ்தீனர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

இது பல மாதங்களாக பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளில்  மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார்  அந்த தாக்குதல்தாரிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது காயமடைந்த தாக்குதல்தாரிகளில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றைய தாக்குதல்தாரி  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹு அந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக புனித ரமழான் காலத்தில் 83,000   பலஸ்தீனர்களுக்கான பிரவேச அனுமதியை இஸ்ரேல் இரத்துச்செய்துள்ளது.

இதனை தீவிரவாத தாக்குதலொன்றாக இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரிகள் இருவரும் மேற்குக்கரையில் யத்தா நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் யூதர்கள் போன்று  மாறுவேடத்தில் வந்து தாக்குதலை நடத்தியிருந்ததாக  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.