இந்தியாவில் நிர்பயா என்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைத்  தூக்கிலிடும் திகதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரிப்பதற்கும் தூக்கிலிடப்படுவதற்கும் 14 நாட்கள் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்கிலிடப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராம் சிங் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளிக்கு 18 வயது நிறைவடையாததால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேரின் தூக்குத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

நான்கு பேருக்கும் நேற்று ( 22.01.2020) தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் என மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அவர்கள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் டெல்லி திகார் சிறையில் உள்ள சிறை எண் 3 க்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்போது புதிய திருப்பமாக குற்றவாளிகள் 4 பேருக்கும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1982 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளியான இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி, கருணை மனு உட்பட அனைத்து சட்டரீதியான விருப்பங்களையும் கடைசியாக தீர்த்து வைப்பதற்கு முன்பு, நிர்பயா வழக்கில் நான்கு மரண தண்டனை குற்றவாளிகளில் எவரையும் தூக்கிலிட முடியாது என்று தெரிகிறது.

அதாவது 2014 ஆம் ஆண்டில், சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கியது, அதன்படி குடியரசுத் தலைவர் குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்ததிலிருந்து 14 நாட்கள் காலாவதியாகும் முன் மரண தண்டனை குற்றவாளியை தூக்கிலிட முடியாது.

கடந்த 1982 ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்பன்ஷ் சிங் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மரண தண்டனை குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

எனவே நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் 15 நாட்கள் ஆகாது என்பதால் அவர்களை அன்றைக்கு தூக்கிலிடுவது சாத்தியம் இல்லை என்கிறார்கள்.

இதேபோல் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின் படி நிர்பயா கொலை குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிடவும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.