புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கமுவவை  வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு க.செவ்வேள் கொழும்பிலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (21) சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தின்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள விடயங்கள் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது வவுனியா பஸ் தரிப்பிடத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் பேரூந்து நடத்துனர்களுக்கும் இடையிலான முறுகல் நிலை மிகவும் துரித கதியில் ஆலோசிக்கப்பட்டு இருவருக்கும் இடையில் ஓர் இணைந்த நேர அட்டவணையை தயாரித்து  பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவகையில் சிறந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

அத்துடன் வவுனியா பஸ்நிலையத்தினை வட மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். 

இது தொடர்பில் அமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார். 

மேலும், ஆரம்பிக்கப்பட்டு முடிவுறாமல் இடைநிறுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி பஸ்தரிப்பு நிலையம் ஓரிருவாரங்களில் வடமாகாண சபையிடம் கையளிக்கப்பட்டு வடமாகாண சபை அதன் நிர்மாணப்பணிகளை பூர்த்திசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் இந்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் போது உறுதியளித்தார்.