(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழர் பிரதேசங்களான வடக்கு ,கிழக்காக  இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் என்ற அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி  மற்றும் பிரதமரின் நிலைப்பாடு என்ன என்பதனை அவர்கள் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறிப்பினர்   சார்ள்ஸ்  நிர்மலநாதன்  சபையில் வலியுறுத்தினார்.

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்திலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் விமல்வீரவன்ஸவினால்  கடந்த 18 ஆம் திகதி  திரை நீக்கம் செய்யப்பட்ட  போது பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது. 

அந்த வேளையில் எதனையும் கூறாத   அமைச்சர் விமல் வீரவன்ச பின்னர் கொழும்புக்கு சென்றவுடன் அந்த பெயர்ப்பலகையில் சிங்கள மொழியே முதலில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டு அவ்வாறே மாற்றினார். 

அதுமட்டுமன்றி வடக்கு ,கிழக்காக  இருந்தாலும் சிங்களமொழிக்கே முதலிடம். இலங்கை  ஒரு சிங்கள பௌத்த நாடு  என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழ் மக்கள் மத்தியில்  பெரும்  மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.