சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் இரட்டை சதம் விளாசியுள்ளதுடன், இலங்கை அணி மொத்தமாக 515 ஓட்டங்களை குவித்து டிக்கேள செய்தது.

சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இத் தொடரில் ஹரேயில் ஆரம்பான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸிக்காக 358 ஓட்டங்களை குவித்தது.

சிம்பாப்வே அணி சார்பில் க்ரெய்க் ஏர்வின் 85 ஓட்டங்களையும், கெவின் கசுஸா 63 ஓட்டங்களையும், ப்ரின்ஸ் மசுவோர் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லசித் எம்புலுதெனிய 114 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியானது நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 106 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்திருந்தது.

அஞ்சலோ மெத்தியூஸ் 93 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்க 42 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டிசில்வா 107.5 ஆவது ஓவரில் அரை சதத்தை பெற, அஞ்சலோ மெத்தியூஸ் 114.6 ஆவது ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் 116.2 ஆவது ஓவரில் தனஞ்சய டிசில்வா 63 ஓட்டங்களுடன் விக்டர் நியாச்சியின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்பையடுத்து வந்த ஏனைய வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து செல்ல சிறப்பாக ஆடி வந்த அஞ்சலோ மெத்தியூஸ் 3 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கலாக 175.6 ஆவது ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்தார்.

இறுதியாக இலங்கை அணி 176.2 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 515 ஓட்டங்களை குவித்தது டிக்ளே செய்தது.

மெத்தியூஸ் 200 ஓட்டங்களுடனும், லசித் எம்புலுதெனிய எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் விக்டர் நியாச்சி மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சேன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுக்களையும், டொனால்ட் டிரிபனோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணி 157 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. சிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.