இரு வார காலப்பகுதிற்குள் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை மேலும்குறைவடையும் என தெரிவித்த உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா,பொருட்களின் விலை குறித்து மக்களின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு - 4 ஆம் குறுக்குத்தெருவில் பொருட்களின் விலை தொடர்பாக பரிசீலனை செய்ய உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர்விவகார  இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யப்பா இன்று நேரடியாக விஜயம் மேற்கொண்டார். 

இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , 

கிழங்கு சாதாரண விலையிலேயே  விற்கப்படுகிறது. அதேபோல் தற்போது வேறு நாடுகளில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே குறைந்த விலையில் நேரடியாக மக்களுக்கு வழங்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். 

பெரிய வெங்காயம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபா வரை காணபடுகிறது. வேறு நாடுகளில் இருந்து வருகின்ற வெங்காய வகையும் காணப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூபா 250, டின் மீன்  ரூபா 185 காணப்படுகிறது. 

மேலும் முன்னர் இருந்ததை விட குறைந்த விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடியும். எமக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். 

ஆகையால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சந்தையில் அரிசியின் விலை குறைந்துள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

தற்போது  நாட்டரிசியின் தொகை விலை 92 ரூபாயாக குறைவடைந்து  காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மரக்கறியின் விலைகளும் குறைந்து காணப்படுகிறது. ஆதலால் மறுபடியும்  இனி வரும் வாரங்களில்குறைந்த விலை மட்டத்தில் பொருட்களின் விலை  காணப்படும் என்று குறிப்பிட்டார்.