(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் அறிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் இல்லம் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வசம் இருப்பதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்களான அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற  நிலையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இது குறித்த விளக்கம் ஒன்றினை சம்பந்தன் முன்வைத்தார். 

இதற்கு பதிலளித்து பேசும்போதே மேற்கண்டவாறு கூறிய தினேஷ் குணவர்தன மேலும்  கூறுகையில்:- 

சம்பந்தனின் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான் கூறவேண்டும். சம்பந்தன் அவர்களுக்கு கொடுத்த வசதிகள் எதனையும் மீண்டும் திருப்ப பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை. அதேபோல் அவருக்கான பாதுகாப்புகளையும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். அதேபோல் வடக்கு கிழக்கின் சகல அரசியல் பிரமுகர்களுக்கும் முறையான பாதுகாப்புகளை வழங்கப்படும் எனவும் அரசியல் நிலைப்பாடுகளில் இவை எவையும் மாறாது எனவும் கூற வேண்டும் என்றார். 

இதன்போது மீண்டும் கருத்து தெரிவிக்த சம்பந்தன் :- இது குறித்து அரச தரப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நான் ஒருபோதும் நான் எந்த சலுகைகளையும் கேட்கவில்லை. இதுதான் உண்மை. அதுமட்டும் அல்ல நா எதிர்க்கட்சி தலைவராகி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே எனக்கு அந்த வீடு வழங்கப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ எதிர்க்கட்சி தலைவரானபோது அடுத்த நாளே வீடு வழங்கப்பட்டது. அல்லது ஒரு வாரம் கழித்து கிடைத்திருக்கும். ஆனால் இரண்டு ஆண்டுகளின் பின்னர் வழங்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக நான் 80 படிகளை ஏறி இறங்கவேண்டியிருந்தது, இதுதான் உண்மை. எனினும் இப்போது நீங்கள் கூறிய நியாயமான விடயங்களுக்கு நன்றி என்றார்.