(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

எனக்கு இரண்டு தினங்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணை வழங்கித்தந்தால் என்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. 

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் ஆளுங்கட்சி உறுப்பினர் காஞ்சன விஜேசேகர ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுமார் ஒரு இலட்சத்தி 20 ஆயிரத்துக்கு உட்பட்ட என்னுடைய குரல் பதிவுகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது என்னுடைய வீட்டில் இருந்து பொலிஸாரினால் ஹாட்டிஸ்க் ஒன்று, மடிக்கணனி ஒன்று மற்றும் எனது 4 கையடக்க தொலைபேசிகள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன.

தற்போது நான் சிறைக்காவலில் இருக்கின்றேன். எனது குரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை மீள் பதிவு செய்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. எனது செயலாளருக்கு தெரிவித்திருக்கின்றேன். என்றாலும் ராஜபக்ஷ் ரெஜிமன்ட் எங்களை பின்தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அத்துடன் எனது குரல் பதிவுகளில் அரசாங்கம் மறைத்த விடயங்களை சபைக்கு சமர்ப்பிப்பதாகவே நான் தெரிவித்திருந்தேன். அந்த பதிவுகளில் சிலவற்றை இன்று 6 மணிக்கு முன்னர் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 

ஆணைக்குழுவின் விசாரணைக்கு நான் எனது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றேன். தற்போது அரசாங்கம் எனது குரல் பதிவுகளையே பயன்படுத்தி வருகின்றது. நான் எந்த மோசடியையும் செய்ததில்லை.

அத்துடன் ஒரு இலட்சத்தி 20 ஆயிரம் வரை இருக்கும் இந்த குரல் பதிவுகளை மீள் பதிவு செய்வதற்கு சிங்கப்பூருக்கு கொண்டு சென்றும் அதனை செய்துகொள்ள முடியாமல் போயிருக்கின்றது. அந்தளவுக்கு எண்ணிக்கையிலான குரல் பதிவுகள் இருக்கின்றன. என்னிடமிருக்கும் மடிக்கணணியில் அதனை பதிவு செய்துகொள்ள முடியாது. 

அத்துடன் நான் தற்போது சிறைக்காவலில் இருக்கின்றேன். வெளியில் இருந்தால் அதனை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். என்றாலும் மீள் பதிவு செய்யும் பணியை எனது செயலாளருக்கு பொறுப்பு சாட்டியிருக்கின்றேன். தற்போது அந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன என்றார்.