கனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மேம்பாட்டு திட்;டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பித் துறைசார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய செயற்றிடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்ஹினொன் இற்கும் இடையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(22.01.2020) இடம்பெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான தன்னுடைய வழிமுறைகள் தொடர்பாகவும் அமைச்சரினால் கனடிய உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதனையடுத்து, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைவரங்களை எடுத்துக் கூறிய அமைச்சர், குறித்த துறைகளின் அபிவிருத்தி தொடர்பான தன்னுடைய திட்டங்களை தெரிவித்ததுடன் அதற்கு, கனடிய அரசாங்கத்தின் உதவிகளையும் ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் வட மாகாணத்தின் தீவகப் பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் காண்பதற்கும் கனடா உதவவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

அத்துடன், கனடிய அரசாங்கத்தினால் ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மற்றும் பெண்கள் மேம்பாட்டு திட்டத்திற்கும் குறிப்பாக வட பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணி வெடி அகற்றும் செற்பாடுகளுகளில் கடனடிய அரசாங்கத்தின் பங்களிப்பிற்கும் நன்றியை தெரிவித்தார்.

அமைச்சரின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த கனடிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் வருடந்தோறும் கனடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற 'உள்ளுர் மக்களின் முன்னேற்றத்திற்கான கனடிய நிதியுதவி'(Canadian fund for Local intiative) எனும் திட்டம் இம்முறையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதினால், மீனவர் அமைப்புக்களும் அதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதனைவிட, இரண்டு நாடுகளின் அரசாங்களும் இணைந்து இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் அபிவருத்தி தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.