சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அண்மையில் மியன்மாருக்கு மேற்கொண்ட இருநாள் விஜயம் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 19 வருடங்களுக்குப் பிறகு மியன்மாருக்கு சீன ஜனாதிபதி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமாக இது அமைந்தது மாத்திரமல்ல, 33 உடன்படிக்கைகளும் அந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டன. 

மியன்மாருக்கும் சீனாவிற்கும் இடையில் இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான உடன்படிக்கைகள் முன்னர் ஒருபோதும் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. அவற்றில் 13 உடன்படிக்கைகள் உட்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்பு பட்டவையாகும். கோடிக்கணக்கான டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு மேலதிகமாக சீனாவே இந்த உட்கட்ட மைப்புத் திட்டங்களை செயற்படுத்துகிறது.

ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதற்காக உலக நாடுகளிடமிருந்து பெருமளவு நெருக்குதல்களை மியன்மார் எதிர்நோக்குகின்ற நிலையில் சீனாவினால் வழங்கப்படுகின்ற நிதி மற்றும் ஏனைய ஆதரவு தருணப் பொருத்தமானது என்பதுடன் மியன்மாரில் பெரிதும் வரவேற்கப்படக்கூடியதும் ஆகும். பதிலாக மியன்மாரின் உட்கட்ட மைப்புத் திட்டங்களில் சீனா செய்கின்ற முதலீடு அதன் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தை (Belt and Road Initiative) பெரிதும் மேம்படுத்தும்.

சீ ஜின்பிங்கின் விஜயத்தின் போது இருதரப்பினரும் சீன - மியன்மார் பொருளாதார வழித்தடத்தை(China - Myanmar Economic Corridor)  அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களைத் துரிதப்படுத்தி முன்னெடுக்க இணங்கிக்கொண்டனர். மியன்மாரின் மேற்குப் பகுதியிலுள்ள ராக்கைன் மாநிலத்திலுள்ள பிரதான நகரான கியோபியூவில் விசேட பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக இருநாடுகளும் சலுகை உடன்படிக்கை ஒன்றிலும், பங்குதாரர் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டிருக்கின்றன. 

கியோபியூவில் ஆழ்கடல் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக சீனா எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய் இணைப்புக்களை நிர்மாணித்திருக்கிறது. தனது யுனான் மாகாணத்தை கியோபியூவுடன் இணைக்கும் தரைமார்க்கப் போக்குவரத்தை சீனா மேம்படுத்தியிருக்கிறது. ஆபிரிக்காவில் இருந்தும், மேற்காசியாவிலிருந்தும் எண்ணெய், எரிவாயு மற்றும் ஏனைய சரக்குகள் இந்த மார்க்கத்தின் ஊடாக சீனாவிற்கு ஏற்கனவே கொண்டு செல்லப்படுகின்றன. சீ ஜின்பிங்கின் விஜயத்தின் போது பூர்த்தி செய்யப்பட்ட உடன்படிக்கைகள் வங்காள விரிகுடாவில் சீனாவின் பிரசன்னத்தைப் பலப்படுத்தும் என்பது மாத்திரமல்ல, கியோபியூவின் ஊடாக குறுகிய தூர வாணிப மார்க்கத்தையும் அவை வழங்குகின்றன. இதன்மூலமாக கப்பற்போக்குவரத்து சந்தடிமிக்க மலாக்கா நீரிணையில் சீனா தங்கியிருப்பதைக் குறைக்கமுடியும். 

மக்களின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு மியன்மார் இடைநிறுத்திய 130 கோடி டொலர்கள் பெறுமதியான மைற்ஸ்டோன் அணை திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் சீன ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது செய்யப்படவில்லை. இன்னும் ஒருசில மாதங்களில் பொதுத்தேர்தல் வரவிருப்பதால் மக்களினால் விரும்பப்படாத ஒரு திட்டத்தைப் புதுப்பிப்பதன் மூலம் வாக்காளர்களைக் கோபப்படுத்துவதைத் தவிர்ப்பதில் மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய கழகம் (National League for Democracy Government)  அக்கறை கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. சீனாவின் மீது மியன்மார் பெருமளவிற்குத் தங்கியிருக்கின்ற போதிலும், பல்வேறு இனக்குழுமங்களைச் சேர்ந்த திரட்டல படைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் குழப்பநிலையை உருவாக்குவதற்கு பெய்ஜிங்கிற்கு ஆற்றல் இருக்கின்ற போதிலும் கூட மைற்ஸ்டோன் திட்டம் தொடர்பில் சீனாவின் கோரிக்கைகளுக்கு மியன்மார் அடிபணியவில்லை. மியன்மார் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது. 

என்றாலும் கூட சீ ஜின்பிங்கின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட பெருவாரியான உடன்படிக்கைகள் இருநாடுகளுக்கும் இடையிலான ஒரு வலுவான உறவுமுறையை வெளிக்காட்டுகின்றன. மியன்மாரில் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் கீழான திட்டங்கள் சீனாவிற்கு வங்காள விரிகுடாவிற்கும், இந்து சமுத்திரத்திற்குமான தரைமார்க்க நுழைவு வசதியையும் கேந்திர முக்கியத்துவ பிரசன்னத்தையும் கொடுக்கின்றன. 

சீனாவிடமிருந்து மியன்மார் பெறுகின்ற மாபேரளவு கடன்கள் கடன்பொறி ஒன்றுக்குள் அந்த நாடு விழக்கூடிய நிலைமையை உருவாக்குமா? மேலும் முக்கியமாக கடன்சுமை கேந்திர முக்கியத்துவ சொத்துக்களை சீனாவிற்குக் கையளிப்பதற்கு மியன்மாரை நிர்பந்திக்குமா? இலங்கை செல்கின்ற பொறுப்பற்ற பாதையில் மியன்மாரும் செல்லத் தொடங்கியிருக்கிறதா? இந்தக் கேள்விகள் இந்தியாவில் கலந்துரையாடப்பட்டு, விவாதிக்கப்படுகின்றன. இந்தியாவினால் மியன்மாருக்கு சிறந்ததொரு மாற்றுத்தெரிவை வழங்கமுடியுமா? சினேகபூர்வமான கடனுதவிகளை வழங்குவதுடன், மியன்மாரில் அதன் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் துரிதப்படுத்துவதற்கு மேலதிகமாக இந்தியா, மக்களை மையப்படுத்திய ஊடாட்டங்களை அதிகரிக்க வேண்டும். 

(டெக்கான் ஹெரால்ட்)