(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்னும் உரிய இடங்களில் ஒப்படைக்கவில்லை. . ஒரு சிலர் வாகனங்களை ஒப்படைத்த போதிலும் அதனை உரிய முறையில் பாவனை செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. . இதன்காரணமாக  புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாகனங்கள் இல்லாமல் உள்ளது. இதன்காரணமாகவே புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம். தற்போதைய சில அமைச்சர்கள் வாடகை அடிப்படையிலேயே வாகனங்களை பாவனை செய்கின்றனர். வாடகை அடிப்படையில் நோக்கும் போது அரசாங்கத்திற்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. எனவே புதிதாக கார்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம்.

அத்துடன் புதிய கார் கொள்வனவு செய்யப்படும் போது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தியே கார் கொள்வனவு செய்துள்ளோம். இதன்காரணமாகவே 118 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. . நாம் எதனையும் மறைமுகமாக. செய்யவில்லை. 

இதேவேளை முன்னைய ஆட்சயின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்களை மீள செலுத்தாதவர்கள்  தொடர்பில் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இது தொடர்பிலான உண்மையான நிலைவரத்தை விரைவில் பகிரங்கப்படுத்துவோம். என்றார்.