சர்வதேச கடல் எல்லையில் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து பெருமளவிலான கப்பல்கள் பயணிக்கின்றன. இக்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பது துறைமுகத்தின் கடமையென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்ட போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : 

இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைதராது அதனை கடந்து செல்லும் கப்பல்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கென உள்ள தகவல் திரட்டு கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால் அதனை உடனடியாக திருத்தியமைத்து இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்பிக்கப்பட வேண்டும்.  

திருகோணமலை துறைமுகம் என்பது இலாபமீட்ட கூடிய துறைமுகமாகும். இத்துறைமுகத்தை இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றியமைப்பது அத்தியாவசிய காரணியாகும். இக்கடல் எல்லையினை கடந்துச் செல்லும் கப்பல்களை திருகோணமலை துறைமுகத்திற்கு ஈர்த்துக்கொள்ளும் பொருட்டு பல்வேறுப்பட்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.

பிரதானமாக துறைமுகத்திற்கு வருகைத்தராது கடந்துச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையினை கணக்கெடுக்க வேண்டும். இச்செயற்பாட்டின் போது கடல் பாதை, கப்பல் தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ரேடர் ஊடுருவல் அமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு ஆகிய தகவல் திரட்டு கட்டமைப்புகளை துறைமுக வளாகத்திற்குள் பொருத்தியுள்ள போதிலும் மென்பொருள் கோளாரு காரணமாக தற்பொழுது இக்கட்டமைப்பு செயலிழந்துள்ளது. 

துறைமுகத்தின் வினைத்திறனான செயற்பாடு மற்றும் அபிவிருத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் இக்கட்டமைப்பினை இரண்டு மாத காலப்பகுதிக்குள் உயர் தொழில்நுட்ப திறனுடன் தரமுயர்த்தப்பட வேண்டும்.