(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவை வழங்காமல் இருக்க ஒரு சில தோட்ட கம்பனிகள் எதிர்க்கட்சியுடன் இணைந்து இழுத்தடிப்புக்களை மேற்கொள்கின்றன.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. 1000ம் ரூபா சம்பளம் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும்   என அரசாங்க பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பிரதமர்  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மலையக மக்களுக்கு  1000ம் ரூபா நாளாந்த  கொடுப்பனவினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கொடுப்பனவினை வழங்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வந்தன.

பெருந்தோட்ட  கம்பனிகள் இச்சம்பளத்தை வழங்குவதால் அவர்களுக்கு  முகாமைத்துவம் சார் நெருக்கடிகள் ஏற்படும் என்பதை கருத்திற் கொண்டு அரசாங்கம் தேயிலை உற்பத்தி வரி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வரிகள் குறித்து விசேட சலுகை வழங்கவும், உற்பத்திகளை விரிவுப்படுத்தவும் நிவாரணம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரசாங்கம் எவ்வாறு  மலையக மக்களுக்கு   1000ம் ரூபா சம்பவளத்தை வழங்க முடியும் என  மலையக அரசியல்வாதிகள்  பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

சம்பள விவகாரத்தை தொடர்ந்து இழுபறி நிலைக்குள் தள்ள ஒரு சில  கம்பனிகள் எதிர்தரப்பினடுன் இணைந்து சதிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த செயற்பாடுகளை  எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்.

பெருந்தோட்ட கம்பனிகளின் கோரிக்கைகளும் தற்போது மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மார்ச் 1ம் திகதியில் இருந்து  1000ம் ரூபாய்  வழங்கப்படும்.

 அத்துடன்   பெருந்தோட்ட பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.