மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரபெல் நடால், ஹாலெப் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-0 என்ற நேர் செட்டில் பொலிவிய வீரர் ஹூகோ டெலியனை வீழ்த்தினார். 

இதன் மூலம் அடுத்த சுற்றுக் நுழைந்த அவர், இரண்டாவது சுற்றில் ஆர்ஜெண்டீன வீரர் பெடரிகோ டெல்போனிசை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 4 ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் 6-3, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை தோற்கடித்து 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 12 ஆம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினி -6, 6-7 (3), 6-4, 6-3, 7-6 (10-5) செட் கணக்கில் அமெரிக்காவின் ரீலி ஒபல்காவை தோற்கடித்தார்.

அத்துடன் டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிக் கைர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டியாகோ ஸ்சிவாட்ஸ்மன் (அர்ஜென்டினா), மரின் சிலிச் (குரோஷியா), கச்சனோவ் (ரஷியா) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

முதல் சுற்றில் ஜப்பான் வீரர் தட்சுமா இட்டோவை எதிர்த்து ஆடிய இந்தியாவின்  தமிழக வீரர் குணேஸ்வரன் 4-6, 2-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவினார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டியை தோற்கடித்தார்.

2 ஆம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் வீழ்த்தி 2 ஆவது சுற்றை எட்டினார். 

எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பென்சிச் (சுவிட்சர்லாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

இதேவேளை முன்னாள் ‘நம்பர் வன்’ வீராங்கனையும், 2008 ஆம் ஆண்டு சாம்பியனுமான ரஷ்யாவின் மரிய ஷரபோவா 3-6, 4-6 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சிடம் (குரோஷியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

2017 ஆம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சை மற்றும் அடிக்கடி காயத்தில் சிக்கியதால் தனது வலுமிக்க ஆட்டத்திறனை இழந்து விட்ட ஷரபோவா தரவரிசையிலும் முதல் 100 இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். 

‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் இந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு அடியெடுத்து வைத்த 32 வயதான ஷரபோவா இந்த முறையும் ஜொலிக்கவில்லை. 

மற்றொரு போட்டியில் 13 ஆம் நிலை வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 4-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆன்ஸ் ஜாபெரிடம் (துனிசியா) தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.