சூடானின் தலைநகரில் உள்ள கார்ட்டூமின் அல்-குரேஷி  பூங்காவில் பட்டியினாலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும்  உள்ள ஆபிரிக்க சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றுக்கு உதவும் படி கோரிக்கை விடுத்து இணையத்தில் பல ஹாஸ் டக்குகள் ட்ரென்டிங் ஆகி வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை ஐந்து சிங்கங்களில் ஒன்று உடல் மெலிந்து  இறந்ததையடுத்தே உலகளவில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கார்ட்டூமின் அல்-குரேஷி பூங்காவில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள குறித்த சிங்கங்களுக்கு பல வாரங்களாக போதுமான உணவு மற்றும் மருந்துவ சிகிச்சைகள் கிடைக்காதனாலேயே இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த பூங்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கங்களின் இந்த பரிதாப நிலைமை குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் விலங்குகளை காப்பாற்ற உதவிகளை பெறுவதற்கும் #SudanAnimalRescue  என்ற இணைய பிரச்சாரத்தை ஒஸ்மான் சாலிஹ்  என்பவர் ஆரம்பித்துள்ளார். 

இந்த பிரச்சினைக்கு விலங்குகளின் பட்டினி நிலைமை மட்டுமன்றி  நோய்த்தொற்றுகள் மற்றும் பழுதடைந்த  இறைச்சிகளை உட்கொண்டமையும் காரணமாக உள்ளமை அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருந்து சிங்கங்களை மீட்பதற்கு அவற்குக்கு நீண்டகால சிறப்பு சிகிச்சை வழங்கப்பட வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.