திருகோணமலை-மொரவெவ  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாமல்வத்த பத்தாம்  வாய்க்கால் குளத்தினை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1985 ஆம் ஆண்டு 10ம் வாய்க்கால் குளத்தை பொதுமக்கள்  சிரமதான அடிப்படையில் புனரமைத்ததாகவும்  இந்த குளத்தை நம்பி  ஆரம்ப காலத்தில் மீன்பிடி, மிருக வளர்ப்பு போன்றவற்றை ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் 2003ஆம் ஆண்டு மீண்டும் வருகை தந்திருந்த போது இக்குளம் தூன்று போன நிலையில் காணப்பட்டதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

1962 ஆம் ஆண்டு அரசினால் கொலனி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நாமல்வத்த கிராமமாகும். இதேவேளை 1972ஆம் ஆண்டு இந்த பத்தாம் வாய்க்கால் குளத்தை புனரமைப்பதற்காக  அரசினால் ஒரு குழியை புனரமைப்பு செய்வதற்காக மூன்று ரூபாய் வீதப்படி ஆயிரத்து இருநூறு ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும்  பிரதேசத்திலுள்ள மூத்த விவசாயியொருவர் குறிப்பிட்டார். 

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை காலம் வரைக்கும் அரசினால் இந்த குளம் புனரமைக்கப்படவில்லை எனவும் குளத்தை புனரமைத்து தருமாறு பல அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடம் கூறியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இக்குளம் புனரமைக்கப்படும் பட்ஷத்தில் இப்பிரதேசத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள்  நன்மையடைவார்கள் எனவும், இக்குளத்தினை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நாமல்வத்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.