Published by R. Kalaichelvan on 2020-01-22 11:06:47
சீனாவில் 9 பேர் உயிரிழப்பதற்கும் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கும் காரணமான கொரேனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு உலக நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.

இந்நிலையில் வடகொரிய தனது நாட்டு பிரஜைகளை சீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கொரேனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதையடுத்து முதல் நாடாக தனது சுற்றுலாப் பயணிகளை சீனாவிற்கு செல்ல வடகொரியா தடை விதித்துள்ளதுடன் மக்களை அவதானமாக செயல்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தோடு அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் குறித்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹொங்கொங்கின் பிரதான பகுதிகளில் சுமார் 650 பேர் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.