அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான உட்கட்சித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளமை அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. 

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகுவதற்கு அக்கட்சியின் தேர்தலில் 2,383 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற வேண்டும். ஜூன் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அந்த இலக்கை அவர் அடைந்தார். அத்தினம் அமெரிக்காவில் பாலின சமத்துவத்துக்கு ஒரு பொன்னாளாக வர்ணிக்கப்படுகிறது. 

ஏனெனில் இதுவரை அமெரிக்காவில் இதுவரை பெண்கள் எவரும் ஜனாதிபதியாக பதவி வகிக்கவில்லை. 1789 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதியாக ஜோர்ஜ் வோஷிங்டன் பதவியேற்றார். இதன் மூலம் ஜனாதிபதி ஒருவரின் தலைமையில் அரசை நிறுவிய உலகின் முதல் நாடாகியது அமெரிக்கா. பராக் ஒபாமா வரை 44 பேர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். எனினும் இவர்களில் பெண்கள் எவரும் இல்லை. 

1960 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக தெரிவு செய்ததன் மூலம், உலகில் பெண்ணொருவரை பிரதமராக தெரிவுசெய்த முதல் நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டது. அதன்பின், இந்தியா, இஸ்ரேல், மத்திய ஆபிரிக்க குடியரசு, பிரிட்டன், போர்த்துகல், டொமினிக்கா, நோர்வே, யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், லித்துவேனியா, போலந்து, பங்களாதேஷ் என பல நாடுகளில் பெண்கள் பிரதமராக நியமிக்கப்பட்டனர். 1974 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் ஜனாதிபதியாகத் தெரிவாகியதன் மூலம் உலகின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார். ஸ்ரீமாவின் புதல்வியான சந்திரிகா பண்டாரநாயக்க 1994 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியானார். 

தற்போதும் ஜேர்மனி, பங்களாதேஷ், நமீபியா, போலந்து மியன்மார், தாய்வான் உட்பட பல நாடுகளில் பெண்கள் அரசாங்கத் தலைவர்களாக பதவி வகிக்கின்றனர். 

ஆனால், அமெரிக்கப் பெண்களுக்கு மாத்திரம் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமெரிக்க சட்டத்தில் பெண்கள் ஜனாதிபதியாக வகிப்பதற்குத் தடை எதுவும் இல்லை. ஆனால், மாறி மாறி இப்பதவியைக் கைப்பற்றும் குடியரசுக் கட்சியோ ஜனநாயகக் கட்சியோ தமது ஜனாதிபதி வேட்பாளராக பெண்களை நியமிக்கவில்லை. போட்டியிட்டால் தானே வெற்றி பெற முடியும்! 

விக்டோரியா கிளஃபின் வூட்ஹுல் எனும் பெண் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் ஆவார். அவர் 1872 ஆம் ஆண்டு சமத்துவ உரிமை கட்சியின் சார்பில் போட்டியிட்டார். 

கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் பிரதான கட்சிகளின் உப ஜனாதிபதி வேட்பாளராக பெண்கள் நியமிக்கப்பட்டபோதிலும் அத்தேர்தல்களில் அக்கட்சிகளுக்கு தோல்வியே கிடைத்தன. 

பிரதான கட்சிகளில் முதல் தடவையாக 1984 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லில் ஜெரால்டின் பெராரோ ஜனநயாகக் கட்சியின் சார்பில் உப போட்டியிட்டார். அவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வோல்டர் மன்டேலும் அப்போது பதவியிலிருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் ரொனால்ட் ரீகன், ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் ஆகியோரிடம் தோல்வியுற்றனர். 

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெய்னுடன்இ உப ஜனாதிபதி வேட்பாளரகா அலாஸ்கா மாநில ஆளுனர் சாரா பாலின் போட்டியிட்டார். இவர்கள் ஜனநாயகக்கட்சியின் பராக் ஒபாமா, ஜோ பிடென் ஆகியோரிடம் தோல்வியுற்றனர். 

இதனால், அமெரிக்காவில் பெண்கள் ஜனாதிபதியாகத் தெரிவாகுவது சாத்தியமே இல்லாதது என்ற கருத்து பெரும்பாலானோரிடம் பரவியிருந்தது. அமெரிக்காவில் சிறுமிகள் யுவதிகளிடம் 'நீங்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்' என கூறுவது அபூர்வம். எழுத்தாளர் எமிலில டெரிபியூஸ் இது தொடர்பாக கூறுகையில் 'நான் சிறுமியாக இருந்தபோது என்னிடம் எவருமே 'நீ என்றாவது ஒரு நாள் ஜனாதிபதியாகலாம் எனக் கூறியதில்லை. ஆனால் எனது சகோதரர்களிடம் அவ்வாறு கூறினார்' என்கிறார். 

2008 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார். இப்போது அதே கட்சியின் சார்பில் முதலாவது பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி நியமிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் 1919 ஜூன் 4 ஆம் திகதிதான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்துக்கு 97 ஆண்டுகள் பூர்த்தியாகி 3 நாட்களின் பின் கடந்த 7 ஆம் திகதி ஹிலாரி கிளின்டன், 2383 எனும் வாக்கு இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை வரை 2,777 பிரதிநிதிகளின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்ததாக உள்ள பேர்னி சாண்டர்ஸ் 1876 வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால், ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

உத்தியோகபூர்வ மாதங்களுக்கு முன்புவரை இத்தகையதொரு நிலை நம்ப முடியாத ஒன்றாகவே பலரால் கருதப்பட்டது. இதனால் ஹிலாரி கிளின்டனின் வெற்றியை பாலின சமத்துவத்துக்கான வெற்றியாக பலரும் கொண்டாடுகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் மனைவியான ஹிலாரி கிளிண்டன் செனட்டராகவும் இராஜாங்க செயலாளராகவும் பதவி வகித்தவர். அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக சாதனை படைப்பதற்கு இன்னும் ஒரு படியை ஆனால், மிக முக்கிய படியை, அவர் தாண்ட வேண்டும். எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்தால் ஹிலாரி கிளின்டன் மற்றொரு புதிய வரலாறு படைத்தவராகி விடுவார்.