சீனாவில் 9 பேரைக் கொன்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அமெரிக்காவில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீனாவில் 9 பேரை கொலை செய்து நூற்றுக் கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய மர்மமான கொரோனா வைரஸால் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள 30 வயதுடைய நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையங்கள் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த ஜனவரி 15 ஆம் திகதி சீனாவுக்கு சென்ற நபர் அமெரிக்காவுக்கு திருப்பி வந்தபோது நிமோனியா போன்ற தாக்க அறிகுறிகள் தனக்கு தென்பட்டதனால் அவர் உள்ளூர் சுகாதார அதிகாரிகளை அணுகியுள்ளார். இதன்போது மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா வைரஸின் தாக்கத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது வொஷிங்டனில் உள்ள வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் மிகவும் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் உள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.