மாதாந்தம் ஓய்வூதியம் பெறுவோரின் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தள்ளது.

இந்த டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொது நிர்வாகம் ,உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்  ஜனக பண்டார தென்னகோன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதுவரையில் 641,000 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ள நிலையில் மாதாந்தம் அவர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 250 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள முடியாமல் இறந்துபோனவர்களின் ஓய்வூதியம் திருட்டு தனமாக ஓய்வூதிய திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவ்வறான முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலேயே டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட பதிவுகள் மேற்கொள்ளபப்டுகின்றன. 

இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக ஓய்வூதிய திணைக்களத்தின் மூலம் இலகுவான  வகையில் சரியான தரவுகளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

 2016 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓய்வூதியம் பெற்ற அனைவரினதும் தகவல் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும்.

முதற்கட்டமாக 80,000 ஓய்வூதியர்களுக்கான தரவுகளை பதிவு செய்வதற்க்கான தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த பதிவு செய்தல் நடவடிக்கையானது பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிடல் திட்டத்தினை மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியம்  பெறுபவர்களுக்கு தெரியப்படுத்தி அதனூடாக இடம்பெறும் ஊழல்களை தடுத்து நிறுத்த முடியும்.