சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இத் தொடரில் நேற்று முன்தினம் ஹரேயில் ஆரம்பான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸிக்காக 358 ஓட்டங்களை குவித்தது.

சிம்பாப்வே அணி சார்பில் க்ரெய்க் ஏர்வின் 85 ஓட்டங்களையும், கெவின் கசுஸா 63 ஓட்டங்களையும், ப்ரின்ஸ் மசுவோர் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லசித் எம்புலுதெனிய 114 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியானது நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் 14 ஓவர்களை எதிர்கொண்டு ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 42 ஓட்டங்களை குவித்திருந்தது.

ஓசத பெர்னாண்டோ 21 ஓட்டங்களுடன் ஆட்டமிக்க திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க, குசல் மெண்டீஸ் மற்றும் திமுத் கருணாரத்ன நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர இலங்கை  அணி 16 ஓவர்கள் முடிவில் 50 ஓட்டங்களை கடந்தது.

இதன் பின்னர் 28.6 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன 37 ஓட்டத்துடன் விக்டர் நியாச்சியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். விக்டர் நியாச்சி முதல் டெஸ்ட் விக்கெட் இதுவாக அமைந்தமை விசேட அம்சமாகும் (92-2). 

மூன்றாவது விக்கெட்டுக்காக அஞ்சலோ மெத்தியூஸுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டீஸ் 51.1 ஆவது ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது 11 ஆவது அரை சதத்தை பதிவுசெய்தார்.

குசல் மற்றும் மெத்தியூஸின் இணைப்பாட்டம் அணிக்கு வலுச் சேர்க்க இலங்கை அணி 54 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 164 ஒட்டங்களை குவித்தது.

இந் நிலையில் குசல் மெண்டீஸ் 66.2 ஆவது ஓவரில் 80 ஓட்டத்துடன் விக்டர் நியாச்சியின் பந்து வீச்சில் பிரண்டன் டெய்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (184-3).

குசல் மெண்டீஸின் வெளியேற்றத்தையடுத்து களம்புகுந்த தினேஷ் சந்திமலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக தனஞ்சய டிசில்வா மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் நல்ல இணைப்பாட்டத்ததை வழங்க இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 106 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது.

அஞ்சலோ மெத்தியூஸ் 93 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்னர். பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் விக்டர் நியாச்சி 2 விக்கெட்டுக்களையும், டொனால்ட் டிரிபனோ சேன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் இலங்கை அணி இன்னும் 63 ஓட்டங்களினால் பின் தங்கிய நிலையில் உள்ள நிலையில் நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.