(எம்.எப்.எம்.பஸீர்)

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பத்தேகம நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சி.சி.டி.யினர் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவுசெய்துள்ளனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் வெளியானதை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் ஒரு அங்கமாக இன்றைய தினம், பத்தேகம நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. 

அதன்படி தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின்  தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.

முன்னதாக கடந்த ஞாயிறன்று எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரமும் நேற்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் 4 மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. 

இந் நிலையிலேயே இன்று பத்தேகம முன்னாள் நீதிவானிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.