(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழிலை நாம் முற்றாக நிறுத்த வேண்டிய தேவையுள்ளது. இது, இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்ல, நாளைய எமது சந்ததியினருக்கான இன்றைய எமது கட்டாயப் பொறுப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டவிரோத முறையிலான கடற்றொழில் காரணமாக எமது கடல் வளம் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்களது செலவுகளுக்கேற்ப அறுவடைகள் கிடைப்பதில்லை என்ற குறைபாட்டினை கடற்றொழிலாளர்கள் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பாக்கு நீரிணை முதல், மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில் கடல் வளங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து ஓர் ஆய்வினை நடத்துவதற்கும் நாம் எண்ணியுள்ளதாகவும் அவர் கூறினார்.