(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மிலேனியம் செலேன்ச் கோப்பரேசன் ஒப்பந்தத்தை (எம்.சி.சி.) குறித்து ஆராய எப்போது அரசாங்கம் ஆராய்வுக் குழுவை நியமித்தது? இந்த குழுவின் ஆய்வுகளின் கால எல்லை என்ன? யார் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்? இந்த உடன்படிக்கை ஆராயப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படுமா மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அனுரகுமார திசாநாயக எம்.பியின் கேள்விக்கு பதில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, 

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் எம்.சி.சி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட போது அமைச்சரவையில் ஆராயாது தமது விருப்பத்திற்கு இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.  

இவர்கள் நல்லாட்சி என்ற சாயத்தை பூசிக்கொண்டு செய்த நாசமான செயற்பாடுகள் குறித்து நாம் மக்களுக்கு எடுத்துக் கூறினோம். அதனை மிகவும் ஆணித்தரமாக நாம் எடுத்துக்கூறினோம். இப்போது நாம் இந்த உடன்படிக்கையை கண்மூடித்தனமாக நிறைவேற்றாது ஆராய வேண்டும் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம். 

இது குறித்து ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது, நான்கு மாதகால எல்லைக்குள் இந்த குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். 

இந்த குழுவில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் லலித் சிறி குனருவான் தலைமையில் டி.எஸ். ஜெயவீர, நிஹால் ஜெயவர்த்தன, நாளக ஜெயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும். நாம் ஒளிவு மறைவாக எந்த உடன்படிக்கையையும் செய்ய மாட்டோம். நாட்டுக்கு ஆரோக்கியமான வகையில் நாம் செயற்படுவோம் என்றார்.