மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோயிலுக்கு, டெல்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 35 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோயில். திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமான, அதே சமயம் காசு, நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோயில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

கடந்த வாரம் இந்தக் கோயிலுக்கு, டெல்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன்மூலம், சன்னதியின் மேற்பகுதி, கதவுகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் அதேஷ் பந்தேகர் உறுதிபடுத்தினார். இருப்பினும், காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், சீரமைப்பு பணிகள் காரணமாக ஜனவரி 15 முதல் 19ம் திகதி வரை கோயில் மூடப்பட்டு, தங்கக் கவசம் மற்றும் விநாயகருக்கு காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டுவரை கோயிலுக்கு ரூ.320 கோடி காணிக்கை வந்துள்ளது. அது தற்போது, ரூ.410 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.

இதுவரை, 20 ஆயிரம் பேர் இதில் பலனடைந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வரையிலான நலத்திட்ட உதவிகள் செய்த வகையில், ரூ.38 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.