'இன்டர்போல்' என அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் துறையின் முன்னாள் தலைவர் மெங் ‍ஹெங்வே (Meng Hongwei) க்கு சீனா 13.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற விசாரணையொன்றுக்காக 14.5 மில்லியன் யென்களை (2.1 மில்லியன் டொலர்) இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டுக்காகவே இவருக்கு இந்த உத்தரவை சீனாவின் தியான்ஜினில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் இன்டர்போலின் தலைமையகம் அமைந்துள்ள பிரான்சிலிருந்து சீனாவுக்கு மெங் விஜயம் செய்தபோது காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அவருக்கு எதிராக இடம்பெற்ற மேற்கண்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் மெங் கைதுசெய்யப்பட்டு, அவரது இன்டர்போல் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொலிஸ் துறையின் அமைப்பு இன்டர்போல் ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.