நாட்டில் ஏற்­பட்­டுள்ள சிங்­கள பெளத்த தேசி­ய­வா­தத்தின் எழுச்­சி­யா­னது சிறு­பான்மை மக்கள் ஒன்­று­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்த்­தி­யி­ருக்­கின்­றது. தமிழ், முஸ்லிம் மக்கள் தமது பிர­தி­நி­தித்­து­வங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்ற யுத்­தத்தில் தமிழ் மக்கள் பேரி­ழப்­பு­களை சந்­தித்­தி­ருந்­தனர். உற­வு­க­ளையும் உடை­மை­க­ளையும் இழந்த மக்கள் நிர்க்­கதி நிலைக்கு உள்­ளா­கினர். விடு­தலைப் போராட்டம் அடக்­கி­யொ­டுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைத்­துவம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வசம் வந்­தி­ருந்­தது. விடு­தலைப் புலிகள் பலம்­பெற்­றி­ருந்த காலத்­தி­லேயே தமிழ் மக்கள் சார்ந்த அர­சியல் பிரச்­சி­னைகள் குறித்து அணு­க­வேண்டும் என்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­த­நி­லையில் விடு­தலைப் புலிகள் யுத்­தத்தில் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின்  தலை­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இடம்­பெற்ற ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தமது பெரும்­பான்­மை­யான ஆத­ரவைத் தெரி­வித்து இந்த தலை­மைத்­துவப் பாங்கை உறு­திப்­படுத்தி வந்­தனர். அதே­போன்றே கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லா­கட்டும் 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லா­கட்டும் தமிழ் மக்கள் தமது தீர்க்­க­மான தீர்­மா­னத்தை இந்தத் தேர்­தல்­க­ளிலும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

தற்­போது சிங்­கள பெளத்த தேசி­ய­வாதம் எழுச்சி பெற்­றுள்ள நிலையில் தமிழ் கட்­சி­க­ளி­டையே ஒற்­று­மையின் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வரையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்­று­வந்­த­போ­திலும் தற்­போது தமிழ் கட்­சி­க­ளுக்­கி­டையே ஏற்­பட்­டுள்ள பிள­வுகள், முரண்­பா­டுகள் கூட்­ட­மைப்­புக்கு தொடர்ந்தும் இத்­த­கைய ஆத­ரவு கிடைக்­குமா என்ற கேள்­வியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

சிங்­களப் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்று புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜபக் ஷ பத­வி­யேற்­றுள்­ள­துடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான இடைக்­கால அர­சாங்­கமும் ஆட்­சிப்­பொ­றுப்பில் அமர்ந்­துள்­ளது. எதிர்­வரும் மார்ச் மாதம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு ஏப்ரல் மாத இறு­தியில் தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பாரா­ளு­மன்றத் தேர்தல் நெருங்­கி­வரும் நிலையில் தமிழ் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் அந்தத் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்கச் செய்­து­வி­டுமோ என்று அஞ்சும் நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஓர­ணி­யா­கவும் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யினர் மற்­றொரு தரப்­பா­கவும் போட்­டி­யிடும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்­சிகள் தற்­போது அங்கம் வகிக்­கின்­றன. இதில் ரெலோ­வி­லி­ருந்து சிறி­காந்தா, சிவா­ஜி­லிங்கம் தலை­மை­யி­லான அணி பிரிந்­தி­ருக்­கின்­றது.

வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டணி என்ற கட்­சியை ஆரம்­பித்­துள்­ள­துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ­வி­லி­ருந்து பிரிந்து சென்ற சிறி­காந்தா அணி­யினர் ஆகி­யோரை உள்­ள­டக்கி புதிய கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்­கு­வது குறித்து கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. ஆனாலும் புதிய கூட்­ட­ணியை பதி­வு­செய்யும் விட­யத்தில் தற்­போது இழு­பறி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் இந்தப் புதிய கூட்­டணி அமைக்­கப்­ப­டு­வதில் சிக்கல் நிலை எழுந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இத­னை­ய­டுத்து தமிழ் விடு­தலைக் கூட்­ட­ணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்­த­சங்­க­ரி­யுடன் உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்­பில் சில தரப்­பினர் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக புதிய அணி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு கடந்த சில வரு­டங்­க­ளா­கவே முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் இதற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­ட­போ­திலும் இன்­னமும் அந்த முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. தமிழ் கட்­சி­க­ளுக்குள் காணப்­படும் அர­சியல் போட்­டா­போட்­டிகள் இதற்கு தடை­யாக காணப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வாறு மாற்றுக் கூட்­டணி அமைக்க முடி­யா­த­வி­டத்து சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி தனித்தும் ஏனைய கட்­சிகள் மாற்­றுக்­கூட்­டணி அமைத்தும் போட்­டி­யிடும் வாய்ப்­பு­களும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. இத­னை­விட கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி தாம் தனித்­து­வ­மாக கள­மி­றங்­க­வுள்­ள­தாக தெரி­வித்து வரு­கின்­றது.

அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி. அடுத்த தேர்­தலை தனித்து சந்­திப்­பதா அல்­லது பொது­ஜன பெர­மு­னவின் மொட்டுச் சின்­னத்தில் ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வதா என்­பது குறித்து இன்­னமும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ர­கு­மாரும் சுயேச்­சை­யாக அடுத்த தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக கருத்து தெரி­வித்து வரு­கின்றார். இவ்­வாறு தமிழ் கட்­சிகள் ஏட்­டிக்குப் போட்­டி­யாக கூட்­ட­ணி­களை அமைப்­ப­திலும் தனித்து கள­மி­றங்­கு­வ­திலும் அக்­கறை செலுத்தி வரு­கின்­றன.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழ் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சியம் உண­ரப்­பட்­டுள்ளபோதிலும் தமிழ் கட்­சி­க­ளுக்­கி­டையே ஒற்­றுமை ஏற்­ப­டாத நிலையில் வேற்­று­மை­களே அதி­க­ரித்து வரு­கின்­றன. முரண்­பா­டுகள் தொடர்ந்து வரும் நிலையில் கட்­சி­களின் தலை­மைகள் பேர­ளவில் ஒற்­றுமை குறித்து பேசி­வ­ரு­கின்­ற­போ­திலும் செயற்­பாட்­ட­ளவில் அதற்­கான முயற்­சிகள் இடம்­பெ­ற­வில்லை.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனும் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­தி­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்கள் மீண்டும் ஒன்­றி­ணைய வேண்டும் என்ற அழைப்பை விடுத்து வரு­கின்­றனர். ஒற்­று­மையின் அவ­சி­யத்தை அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இதே­போன்றே முன்னாள் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்­த­சங்­கரி உட்­பட ஏனைய கட்­சி­களின் தலை­வர்­களும் ஒற்­றுமை தொடர்பில் வலி­யு­றுத்­து­கின்­றனர். ஆனால், நடை­மு­றையில் எத்­த­கைய முன்­னேற்­றங்­களும் காணப்­ப­ட­வில்லை.

திரு­கோ­ண­ம­லையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற தமி­ழ­ரசுக் கட்­சியின் பொங்கல் நிகழ்வில் கலந்­து­கொண்ட கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தமிழ் மக்­களின் ஒற்­று­மை­யில்தான் எதிர்­காலம் தங்­கி­யுள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இங்கு உரை­யாற்­றிய அவர், எமது ஒற்­று­மையை நீங்கள் அனை­வரும் பாது­காக்க வேண்டும்.  அதில்தான் எமது எதிர்­காலம் தங்­கி­யி­ருக்­கின்­றது. மக்­களின் ஜன­நா­யக முடி­வுதான் எங்­க­ளது அத்­தி­வா­ர­மாகும். அதுதான் எமது பலம். எமது போராட்­டத்தை சர்­வ­தேச ரீதி­யாக அங்­கீ­க­ரிக்கும் நிலைமை ஏற்­ப­டு­வ­தற்கு மக்­களின் ஜன­நாயக முடி­வுதான் கார­ண­மாக இருந்­து­கொண்டு இருக்­கின்­றது. எனவே, எமது ஒற்­று­மையை பலப்­ப­டுத்­து­வதன் மூலமே எதிர்­கா­லத்தை சுபீட்­ச­மாக்­கலாம் என்றும் கூறி­யுள்ளார்.

இதி­லி­ருந்து தமிழ் மக்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு தமிழ் பிர­தி­நிதித்­து­வத்தை அதி­க­ரிப்­பதன் மூலமே எதிர்­கா­லத்தை வள­மாக்க முடியும் என்று சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே அவ­ரது கருத்து வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஆனால், வாய்ப்­பேச்­ச­ளவில் இத்­த­கைய ஒற்­று­மைக்­கான அழைப்பு இருக்­கக்­கூ­டாது. அதனை விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுடன் செயற்­ப­டுத்த வேண்­டி­யது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கட­மை­யா­க­வுள்­ளது. அதேபோன்றே ஏனைய கட்சிகளின் தலைமைகளும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி செயற்படவேண்டியது இன்றியமையாததாகவுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வது தொடர்பில் ஒற்றுமையுடன் சிந்திக்க வேண்டும். பதவி மோகத்தை மட்டும் கருத்தில்கொண்டு அதனைப் பெறுவதற்காக மட்டும் கட்சிகளை பயன்படுத்தும் செயற்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் இனியாவது கைவிட வேண்டும்.

தெற்கில் சிங்கள பெளத்த தேசியவாதம் எழுச்சிபெற்றுள்ள நிலையில் தமிழ் தலைமைகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பது எந்தவகையிலும் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தப்போவதில்லை. எனவே இனியாவது தமிழ் தலைமைகள் சிந்தித்து ஒன்றுபடவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு தமிழ் தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

(21.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )