இளம் உடற்கலை (International Rhythmic Gymnastic ) வீராங்கனை ஹென்னா-மேரி ஒன்டாட்ஜே சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச இசைத்துவ உடற்கலை (International Rhythmic Gymnastic ) போட்டியான சூரிச் கிண்ணம் -2020 இல்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

முதலாவது  சர்வதேச இசைத்துவ உடற்கலை போட்டிகள்  சுவிற்சர்லாந்தின் வோல்கெட்ஸ்வில்லில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ்ஸர்லாந்து  உட்பட ஐரோப்பா முழுவதிலும் உள்ள 18 நாடுகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட உடற்கலை வீர, வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

இந்த போட்டியில், இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹென்னா-மேரி ஒன்டாட்ஜே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் ஆறு மாதங்களில் டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹென்னா-மேரி ஒன்டாட்ஜே  கனடாவில் பிறந்தவர். கனடாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளிலும், கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிகழ்வுகளிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

பின்னர் சர்வதேச இசைத்துவ உடற்கலை போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றினார்.

2018 கொமன்வெல்த் போட்டிகளில் பங்குபற்றியதன் மூலம்  இலங்கை வரலாற்றில் கொமன்வெல்த் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இசைத்துவ உடற்கலை வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றார். 

இதேவேளை 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டிருந்தார். இது அவரது முதல் ஆசிய விளையாட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.