அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நேற்று இடம்பெற்ற ஆட்டங்களில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியொன்றில் நடப்பு சாம்பியனும், 7 முறை பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், 37 ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் ஜோன் லெனர்ட் ஸ்டிரப்பை சந்தித்தார்.

2 மணி 16 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5), 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோன் லெனர்டை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை தோற்கடித்தார். 

மற்ற ஆட்டங்களில் சிட்சிபாஸ் (கிரீஸ்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா), பிலிப் கோல்ஸ்ரிபெர் (ஜெர்மனி), சாம் குயர்ரி (அமெரிக்கா), குய்டோ பெல்லா (அர்ஜென்டினா), டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி கண்டனர்.

இதேவளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டி ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் அனடாசியா போட்டாபோவாவை தோற்கடித்து 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் மேரி போஸ்கோவாவை தோற்கடித்தார். 

இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் உக்ரேன் வீராங்கனை லெசியா சுரென்கோவை  சாய்த்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 39 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 15 வயதான சக நாட்டு வீராங்கனை கோரி காப்பிடம் வீழ்ந்தார். 

இதேபோல் 2017 ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-2, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஷூய் ஜாங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

2011 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர் 1-6, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் தகுதி சுற்று வீராங்கனையான 18 வயது கேத்தி மெக்நல்லியிடம் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் கிவிடோவா (செக்குடியரசு), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), சோபியா கெனின் (அமெரிக்கா), அலெக்சான்ட்ரோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.