கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த வைரஸ் தாக்கத்திற்குள்ளான 217 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சீனநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸ் மனிதரில் இருந்து மனிதருக்கு பரவக்கூடியது எனவும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட்டால் இதனை கட்டுப்படுத்த முடியும் எனவும்  சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் மத்திய நகரமான வுஹானில் இருந்து பீஜிங், ஷங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது.

இதுவரை  இப்பிரதேசங்களில் மட்டும் நோய் தாக்கத்திற்குள்ளன 200 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் அகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நால்வர் இனம் காணப்பட்டுள்ளனர். 

வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த நான்காவது நபர் ஜனவரி 19 அன்று இறந்துள்ளதாக  வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனரி இதய நோய் உள்ளிட்ட அடிப்படை நோய்களைக் கொண்டிருந்த 89 வயதான இந்த நபருக்கு  ஜனவரி 13 ஆம் திகதி நோய் அறிகுறிகள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு மரணமடைந்துள்ளார். 

அத்துடன் வுஹானில் பதினைந்து மருத்துவ ஊழியர்களுக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

குறித்த வைரஸ் ஒரு வகை நிமோனியாவை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ்கள் சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்த நோய் அறிகுறிகளில் அடங்கும், இதன் தாக்கம் சுவாச நோய்களைப் போலவே இருப்பதுடன் நோயாளியை ஆய்வு செய்து இனங்காண்பதற்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை அவசரக் குழுவைக் கூட்டி, இந்த வைரஸ் தாக்கம் ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக இருக்கிறதாகவும் அதை நிர்வகிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பற்றி ஆராய்ந்துள்ளது. 

இதுவரை, உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு வர்த்தக அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கவில்லை, ஆனால் சுயாதீன நிபுணர்களின் குழு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவ்வாறு பரிந்துரைகளைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வாரம் சீனாவின் புத்தாண்டு விடுமுறை காரணமாக சீன பயணிகள் வெளிநாடுகளுக்கு விமானங்களில் பயணிக்க உள்ளனர். 

இதன் காரணமாக உலகளவில் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால்,  அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகள்  வுஹானில் இருந்து  பயணிக்கும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்போவதாக  அறிவித்துள்ளன.