(ஆர்.யசி)

இலங்கையின் நீர்ப்பரப்புக்குள் கைத்தொழில்,  வீட்டுக் கழிவுகளை அகற்றுவதைத் தடைசெய்வது உள்ளிட்ட கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒன்பது ஒழுங்குவிதிகள் இன்று  21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய தினம்  பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கை நீர்ப்பரப்பில் உள்ள மீன் இனங்கள் மற்றும் கடல்வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக கைத்தொழில், வீட்டுக் கழிவுகளை அகற்றுவது தடைசெய்யப்படுவதுடன், நீர்பரப்புக்களினுள் மீன் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்களிற்கு அழிவை ஏற்படுத்துகின்ற முறை ஒன்றில் ஏதேனும் கழிவை, வெளிக் கழிவுப் பொருளை கொட்டுதல் ஆகாது. அவற்றுடன் கடற்பரப்பை நிரப்புதலோ அல்லது மீட்டெடுத்தலோ இதன்மூலம் தடைசெய்யப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதிய 948/ 25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1996 ஆம் ஆண்டு மீன்பிடித் தொழிற்பாட்டு ஒழுங்குவிதிகளும் திருத்தப்படுகின்றன.

அதேநேரம், மீன்பிடியின் போது ஈட்டிகளைப் பயன்படுத்தல், ஈட்டி பொருத்தப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தல் அல்லது உடைமையில் வைத்திருத்தல் அல்லது மீன்பிடி வள்ளத்தில் வைத்திருத்தலைத் தடுக்கும் ஒழுங்கு விதியும் இன்றைய தினம் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கைக்குள் அல்லது இலங்கை நீர்ப்பரப்புகளுள் (செபலோபொலிஸ் சொன்னெராடி) தம்புவ மீன் இனங்களைப் பிடித்தல், உடைமையில் வைத்திருத்தல், இடம்பெயர்த்தல், கொள்வனவு செய்தல், விற்பனைக்காக காட்சிக்கு வைத்தல், விற்றல் அல்லது ஏற்றுமதி செய்தல் என்பவற்றைத் தடுப்பது தொடர்பான ஒழுங்குவிதியும்  இன்று  விவாதிக்கப்படும் ஒழுங்கு விதிகளில் உள்ளடங்குகிறது.

இவற்றுடன், மீன், மற்றும் மீன் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஒழுங்கு விதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

 இதற்கிணக்க மீன் உற்பத்தி ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மற்றும் மீள்ஏற்றுமதிகளைப் பதிவுசெய்தல், அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் உரிய வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலும் ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்படுகின்றன.

1996ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான இந்த ஒழுங்குவிதிகளை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.