இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மனிய நீதிமன்றம்  சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதன்படி 40 வயதான ஜி. நவனீதன் என்பவருக்கே 6 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று (20.01.2020) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர் எனக் கூறப்பட்டது. 

கொலைசெய்யப்பட்ட அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டின் அருகிலுள்ள வீட்டிலிருந்து  உளவு பார்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர் 2012 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்துவந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர்  கைது செய்யப்பட்டார்.

வெளிவிவகார அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி, கொழும்பில் தனது வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து வெளியேறியபோது, ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.