கற்பிட்டி தலவில் கடற்கரையோரப்பகுதியில் இன்று மாலை ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கரையொதிங்கிக் காணப்பட்ட கடலாமையை அவதானித்துள்ளார். 

இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு தகவலை வழங்கிய நிலையில். குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட கடலாமையை பார்வையிட்டுள்ளனர்.

ஆமையின் தலை மற்றும் முதுகுத் தண்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். குறித்த ஆமையை இறைச்சிக்காக  பிடிப்பதற்கு மண்டாலினால் தாக்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். 

இதன்போது கடலாமையை உயிருடன் பிடித்து சிகிச்சையளிப்பதற்காக நிக்காவெரட்டிய மிருக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

ஒலிவ் நிற கடலாமை (Olive Ridley Sea Turtle) வகையைச் சார்ந்தது என வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த கடலாமை 30 கிலோ எடைக் கொண்டு காணப்படுவதாக அவர் மேலும்  தெரிவித்தார்.