இந்தியாவின் அக்கறைகளும் இலங்கையின் இணக்கப்போக்கும் : அஜித் டோவால் கோத்தாபயவிற்குக் கூறியது என்ன?

Published By: Digital Desk 4

20 Jan, 2020 | 10:00 PM
image

-பி.கே.பாலசந்திரன்

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கடந்த சனிக்கிழமை இலங்கைக்குக் குறுகியதொரு விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் பாதுகுhப்பு ஆலோசகர் அஜித் டோவால், இந்தியாவும் இலங்கையும் மாலைதீவும் கடற்பரப்பு விழிப்புநிலை திட்டமுறையை ((Maritime Domain Awareness - MDA) மீள்பரிசீலனை செய்து, அதை மேலும் மேம்படுத்தி பிராந்தியத்தின் ஏனைய நாடுகளையும் அவதானிகளாக உள்ளடக்க வேண்டியது மிகவும் முக்கயமானதென்று இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குக் கூறியிருக்கிறார்.

கடற்பரப்பு விழிப்புநிலை திட்டமுறை இந்தப் பிராந்தியத்தில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது. இந்த விடயத்தில் ஒத்துழைப்பு இல்லாதமை காரணமாக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2014 ஆம் ஆண்டில் ஆழமான பிளவொன்று ஏற்பட்டது. அந்த ஆண்டு தங்களுக்கு அறிவிக்காமல் கொழும்பு துறைமுகத்தில் சீன அணு நீர்மூழ்கிக் கப்பலொன்று தரித்து நிற்பதற்கு அன்றைய அரசாங்கம் அனுமதித்ததாக இந்தியர்கள் குற்றஞ்சாட்டினார்கள். அந்த நீர்மூழ்கிக் கப்பல் சம்பவமே 2010 ஆம் ஆண்டிலிருந்து சீனாவுடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்நியோன்னியமாக நெருங்கிச் செயற்பட்டதை எச்சரிக்கை உணர்வுடன் அவதானித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பொறுமையை இழக்கச்செய்தது. 

ஜனாதிபதி கோத்தபாயவுவுடனான டோவாலின் பேச்சுவார்த்தை குறித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு, இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பதிலும் இந்திய மற்றும் இலங்கைக் கரையோரக் காவற்படைகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் இருநாடுகளும் அக்கறைகளை வெளிப்படுத்தியதாகக் கூறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல், சட்டவிரோத மீன்பிடி ஆகியவற்றைத் தடுக்கும் முகமாக இருநாடுகளினதும் கரையோரக் காவற்படைகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதை டோவால் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினார். 

புலனாய்வுத் தகவல் சேகரிப்புத் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் இலங்கைக்கு உதவிசெய்யப் போவதாக இந்தியா உறுதியளித்திருக்கிறது. புலனாய்வுத் தகவல் சேகரிப்பு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா 5 கோடி டொலர்கள் கடனுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறது. கடல்சார் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் (Maritime Research Coordinating Centre) ஒன்றை அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. 

இந்தியாவின் கோரிக்கைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. ஏனென்றால் சீனா உட்பட உலகின் சகல பாகங்களிலுமிருந்து முதலீட்டுக்காக இலங்கையின் பொருளாதாரத்தைத் திறந்து விடுகின்ற அதேவேளை, இந்தியாவின் கேந்திர முக்கியத்துவ அக்கறைகளை மதித்து செயற்பட வேண்டும் என்பது கோத்தாபய ராஜபகஷ் அரசாங்கத்தின் அணுகுமுறைகளின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. 

அதிகரிக்கும் சீன செயற்பாடுகள்

டோவாலின் வேண்டுகோள்களில் பிரதிபலிக்கின்றவாறு, இந்தியாவின் அக்கறைகள் தெற்காசியாவிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் அதிகரிக்கும் சீன நடவடிக்கைகளிலிருந்தே கிளம்புகின்றன. மேற்காசியாவிலிருந்து தங்குதடையற்ற எண்ணெய் விநியோகத்திற்காக கிழக்கு - மேற்கு கடற்பாதையைப் பாதுகாப்பதற்குப் புறம்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனப் பிரஜைகளின் அதிகரிக்கும் பிரசன்னத்தையும் சீனாவின் பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை பெய்ஜிங்கிற்கு இருக்கிறது.

பாக்கிஸ்தானில் கவடாரிலும், இலங்கையில் அம்பாந்தோட்டையிலும், பங்களாதேஷின் சிட்டாகொங்கிலும், மியன்மாரின் கியோபியூவிலும் சீனாவிற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் இருக்கின்றன. இவையெல்லாமே இந்தியாவின் கோடிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. சுற்றிவளைக்கப்படுவது குறித்து இந்தியா அஞ்சுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைக் கடற்படைக்கு பி - 625 ரக கப்பலை வழங்கிய பிறகு, அதேவருடத்தில் பங்களாதேஷுக்கு பெய்ஜிங் 053 ரக போர்க்கப்பல்கள் இரண்டை அன்பளிப்புச் செய்திருக்கிறது. 

ஜனாதிபதி சி ஜின்பிங்கின் பேரார்வம் மிக்க மண்டலமும் பாதையும் (Belt and Road Initiative) செயற்திட்டத்தில் பங்கேற்கின்ற நாடுகளுடனான வாணிபம் 2019 இல் மொத்தமாக 9.27 ட்ரில்லியன் யுவான்களாக (1.34 ட்ரில்லியன் டொலர்கள்) விரிவடைந்திருக்கிறது. இது அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி சீனாவின் முழுமொத்தமான வர்த்தக வளர்ச்சியை 7.4 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது. 

சீன - பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China - Pakistan Economic Corridor) கீழ் ஆறு கோடி டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்படுமென உறுதியளிக்கப்பட்டிருப்பதாக சீனாவின் சுங்கப் பொதுநிர்வாகப் பிரதியமைச்சர் சோவ் ஷிவூ கூறினார். 'ரஷ்யா டுடே' இணையத்தளத்தினால் வெளியிடப்பட்ட தகவலின்படி சீனா, 167 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் மண்டலமும் பாதையின் புதிய செயற்திட்டங்களுக்காக சுமார் 200 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கிறது. 

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள கியோபியூவில் 25 மீட்டர் ஆழமான துறைமுகமொன்றை சீனா நிர்மாணிக்கிறது. இது வங்காள விரிகுடாவில் தனது ஆதிக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. கடந்த வாரம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மியன்மாருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது மண்டலமும் பாதையும் செயற்திட்டத்திலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்கிக்கொண்டனர். சனிக்கிழமையன்று இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையின் பிரகாரம் கியோபியூவில் விசேட பொருளாதார வலயம் (Special Economic Zone) ஒன்றை நிர்மாணிப்பதைத் துரிதப்படுத்துவதற்குக் கடுமையாகப் பாடுபடுவதென்று சீனாவும், மியன்மாரும் இணங்கியிருக்கின்றன. 

மியன்மாரின் 3 தேசிய விசேட பொருளாதார வலயங்களில் ஒள்றான கியோபியூ வலயத்தை அமைப்பதற்கான திட்டத்தில் பங்கேற்பதற்கு உலக நாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அழைத்தது. அரசாங்கப் படைகளுக்கும், முஸ்லிம் ரோஹிங்கியாக்கள் மற்றும் ஏனைய ராக்கைன் குழுக்களுக்கும் இடையிலான மோதல்களினால் நெருக்கடிக்கு உள்ளாகிய ராக்கைன் மாநில பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவே அரசாங்கம் உலக நாடுகளுக்கு அத்தகைய அழைப்பை விடுத்தது.

2015 ஆம் ஆண்டு கியோபியூ விசேட பொருளாதார வலயத்தை நிர்மாணிப்பதற்கான ஏலத்தில் சீன இன்டர்நெஷனல் ட்ரஸ்ட் அன்ட் இன்வெஸ்மென்ட் கோப்பரேஷன் (China International Trust and Investment Corporation) தலைமையிலான ஆறு கம்பனிகளின் கூட்டமைவு வெற்றிபெற்றது. 3 வருடங்களுக்குப் பிறகு நீண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்தக் கம்பனிகள் கூட்டமைவு மேற்படி திட்டம் குறித்து மியன்மாருடன் திட்டவரைவு உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்தது. 

அந்த சீன கம்பனிகள் கூட்டமைவு தெரிவித்த தகவல்களின்படி துறைமுக அபிவிருத்தி நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதலாவது கட்டம் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கான இரு தளங்களின் நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்டது. இதற்கு மொத்தம் 130 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் பூர்த்தியானதன் பின்னர் துறைமுக நிர்மாணம் ஆரம்பமாகும். 

இந்தத் துறைமுகமும், கைத்தொழில் பூங்காவும் இணைந்து உள்ளுர்வாசிகளுக்கு வருடாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும். அத்துடன் முதல் 50 வருடகாலத்தில் 1500 கோடி டொலர்கள் வரிவருமானத்தையும் உருவாக்கும் என்று இந்தக் கம்பனிகள் கூட்டமைவு சின்ஹுவாவிற்குக் கூறியது.

இந்தியாவின்  பதில் நடவடிக்கைகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அதன் 'கிழக்கு நோக்கிய கொள்கையின்' ஒரு அங்கமாக ஆசிய அயல்நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. கொழும்புத் துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திப் பணியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிர்பார்த்திருக்கிறது. அத்துடன் மியன்மாரின் ராக்கைனிலுள்ள சிட்வே துறைமுகத்துடன் கொல்கதா துறைமுகத்தை இணைப்பதற்கென்று வகுக்கப்பட்ட கலாடன் பல்நோக்கு இடைத்தரிப்புப் போக்குவரத்துத் திட்டத்தின் (Kaladan Multi - ModalTransit Transport Project) அபிவிருத்திக்கு  ஆதரவளிக்கவும் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடல்சார் கண்காணிப்பு ஆற்றல் பற்றி இந்தியா விசனமடைந்திருக்கிறது. இதன் காரணத்தினால் தான் இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவுடனான தனது சந்திப்பின் போது டோவால் கடல்சார் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையமொன்றை அமைப்பது பற்றி அவர் ஆராய்ந்தார். தென்னிலங்கையில் றுஹுணு பல்கலைக்கழகத்தில் கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் கல்விக்குமான சீன - இலங்கை கூட்டுநிலையமொன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. தனது பங்கேற்புடன் அதேபோன்றதொரு நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா விரும்புகிறது போலும். 

சீன வெளியுறவு அமைச்சரின் விஜயம் 

டோவால் கொழும்பிற்கு விரைந்தமைக்கான உடனடிக்காரணம் ஜனவரி 14 ஆம் திகதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீ கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயமாக இருக்கக்கூடும். அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் சீனா செய்துகொண்ட 2017 உடன்படிக்கைக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களின் பின்புலத்திலேயே வாங் ஜீயின் இந்த விஜயம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் துறைமுகத்தை 99 வருடக்குத்தகைக்குக் கொடுத்தமை பற்றி மாத்திரமல்ல, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கோத்தபாயவிற்கு ஐயுறவுகள் இருந்தன. இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பு இலங்கையின் கடற்படையின் பொறுப்பிலேயே இருக்கிறது. ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பும் முற்றிலும் அதேவிதமாகத்தான் இருக்கிறதா என்பது குறித்து அவருக்கு நிச்சயமில்லை. பாதுகாப்பு தொடர்பில் இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் தற்போதைய உடன்படிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால் பின்னர் அவர் 2017 உடன்படிக்கையின் வர்த்தக அம்சங்கள் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்று கூறிய அதேவேளை, எல்லைக் கட்டுப்பாடு என்பது இலங்கையின் சுயாதிபத்திய உரிமை என்ற காரணத்தினால் இலங்கையின் தேவைகளுக்கமையப் பாதுகாப்பு அம்சம் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்று வலியுறுத்தினார்.

கோத்தபாய ராஜபக்ஷவின் இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்ட உடனடியாகவே அதுகுறித்து விளக்கங்களைப் பெறுவதற்காக சீன வெளியுறவு அமைச்சரின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விரைந்து வந்திருந்தார். இலங்கையில் சீனா மேலும் கூடுதலான முதலீடுகளைச் செய்ய விரும்புவதாக கோத்தபாயவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அந்த விசேட தூதுவர் கூறினார். அதற்குப் பிறகு கடந்த வாரம் வெளியுறவு அமைச்சர் வாங் ஜீ கொழும்பு வந்தார். 

இலங்கையின் உள்விவகாரங்களில் 'வெளியார்' தலையிடுவதற்கு சீனா ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகப் பிரகடனம் செய்த வாங் ஜீ சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு உதவுவதாகவும் உறுதியளித்தார். எதிர்வரும் பெப்ரவரியிலும், மார்ச்சிலும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கைக்கு ஆதரவாக சீனா செயற்படும் என்பதே இதன் அர்த்தமாகும். இதன்மூலமாக சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டார். 

சிறிய நாடுகளின் நெருக்கடியான நிலை

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் நேபாளத்தில் சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் காண்பிக்கின்ற பாரிய கேந்திர முக்கியத்துவ நலன் அந்த நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் கவலையளிக்கிறது. பல வருடங்களாக உள்நாட்டு வன்முறைக் குழப்பங்களினால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகள் தொடர்ச்சியான உறுதிப்பாடற்ற நிலையிலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கும் நிலையில் வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டபோட்டியிலிருந்து விடுபட்டு நடுநிலையான கொள்கையொன்றைப் பின்பற்றுவதில் காண்பிக்கக்கூடிய அக்கறை விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஆனால் அத்தகைய நிடுநிலைமை நடைமுறைச் சாத்தியமற்றது. வல்லாதிக்கப் போட்டிகளிலிருந்து உச்சபட்ச நலன்களைப் பெறுவதற்கு ஒரு வல்லாதிக்க நாட்டைப் பயன்படுத்தி ஒரு கயிற்றில் நடக்கின்ற காரியத்தையே இந்த சிறிய நாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48