இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை குவித்துள்ளது.

சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டி நேற்றைய தினம் ஹாரேயில் ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி அந்த அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கெவின் கசுஸா மற்றும் ப்ரின்ஸ் மசுவோர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால் சிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 22 ஓவர்கள் நிறைவில் 54 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் 39.2 ஆவது ஓவரில் ப்ரின்ஸ் மசுவோர் அரை சதத்தை பதிவுசெய்தார். எனினும் அவர் 50.1 ஆவது ஓவரில் லசித் எம்புலுதெனியவின் பந்து வீச்சில் திமுத்திடம் பிடிகொடுத்து 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் சிம்பாப்வேயின் முதல் விக்கெட் 96 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய க்ரெய்க் ஏர்வினுடன் கைகோர்த்த கெவின் கசுஸா, 59.1 ஆவது ஓவரில் தனது முதல் அரைசதத்தை பெற்றார்.

இருப்பினும் அதன் பின்னர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத அவர் 75.3 ஆவது ஓவரில் 63 ஓட்டத்துடன் லஹிரு குமாரவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் (164-2).

தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக  க்ரெய்க் ஏர்வின்  மற்றும் பிரண்டன் டெய்லர் ஜோடி சேர்ந்தாட சிம்பாப்வே அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

க்ரெய்க் ஏர்வின் 55 ஓட்டங்களுடனும், பிரண்டன் டெய்லர் 13 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இவர்களின் இணைப்பாட்டமானது அணிக்கு மேலும் வலு சேர்த்தாக அமைந்தது. அதனால் சிம்பாப்வே அணி 88 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை கடந்தனர்.

இருந்தபோதும் 91.5 ஆவது ஓவரில் பிரண்டன் டெய்லர் 21 ஓட்டத்துடன் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த சிம்பாப்வே அணித் தலைவர் சேன் வில்லியம்ஸ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் லசிம் எம்புலுதெனியவின் பந்து வீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் சிம்பாப்வே அணிக்கு நம்பிக்கையூட்டிய க்ரெய்க் ஏர்வின்  3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியாறினார். 

இதனால் சிம்பாப்வே அணி 247 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்படி ரெஜிஸ் சகாப்வா 8 ஓட்டங்களையும், சிக்கந்தர் ரசா சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ஓட்டங்களையும், கைல் ஜார்விஸ் ஒரு ஓட்டத்துடனும், ஐன்ஸ்லி என்ட்லோவ் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிந்தனர்.

அதனால் சிம்பாப்வே அணி 328 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது. இருப்பினும் இறுதி விக்கெட்டுக்காக டொனால்ட் டிரிபனோ மற்றும் விக்டர் நியாச்சி ஜோடி சேர்ந்தாட சிம்பாப்வே அணி 350 ஓட்டங்களை குவித்தது. 

எனினும் விக்டர் நியாச்சி  11 ஓட்டத்துடன் லக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க டொனால்ட் டிரிபனோ 44 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனார்.

இதனால் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 148 ஓவர்களை எதிர்கொண்டு அ‍5னைத்து விக்‍கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை குவித்து.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் எம்புலுதெனிய 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.