(செ.தேன்மொழி)

கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பலமான பொதுக் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திர சமரவீர தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பவர் மிகவும் திறைமையானவர். அவரது அரசியல் செயற்பாடுகளில் கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றியவர் என்பதுடன் இராணுவத்தினரின் நலன் கருதியும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தவர்.

இருந்த போதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு குறைவாகவே உள்ளது. எவ்வளவு திறமை சாலியாக இருந்தாலும் மக்களிடம் ஆதரவு இல்லாமல் இருப்பதால் எந்தவித பயனும் கிடைக்காதே. அதனால் அவர் மக்களின் விருப்பிற்கினங்கி தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பதே நடைமுறைச் சாத்தியமாகும். 

தலைமைத்துவம் தொடர்பான எமது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக அவருக்கு விளக்கியுள்ளோம். இனிமேல் அவர்தான் இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும். ஆனால் தலைமைத்துவம் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட இழப்பை மீண்டும் அடைய நாங்கள் விரும்பவில்லை. அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவின் தலைமையில் பலமான கூட்டணியை அமைத்து பொது தேர்தலில் போட்டியிடவே நாங்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.