மலை­ய­கத்தில் அமை­ய­வுள்ள தேசிய பல்­க­லைக்­க­ழகம் சமூ­கத்தை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்­துச்­செல்லும் - கலா­நிதி ச. கரு­ணா­கரன்

மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமை­வது குறித்து காத்­தி­ர­மான நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் இக்­கா­ல­கட்­டத்தில், அப்­பல்­க­லைக்­க­ழ­கத்தின் தேவை மற்றும் எவ்­வா­றான துறை­களைக் கொண்­டி­ருத்தல் அவ­சியம் என்­பது பற்றி  மஹ­ர­கம தேசிய கல்வி நிறு­வ­னத்தின் சமூக விஞ்­ஞா­னத்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்  கலா­நிதி ச. கரு­ணா­கரன் வீர­கே­சரிக்கு வழங்­கிய நேர்­காணல் விபரம்:

கேள்வி : மலை­யகப் பல்­க­லைக்­க­ழகம் பற்றி தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்­டு­ வரும் கோரிக்­கைகள் குறித்து என்ன கூற­வி­ரும்­பு­கி­றீர்கள்?

பதில் : ‘மலை­யகப் பல்­க­லைக்­க­ழ­கம்’­என்று கூறு­வ­தை­விட மலை­யகத் தமி­ழரின் தனித்­து­வத்தைப் பேணக்­கூ­டிய தேசிய பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை அமைத்தல் பற்­றிய முயற்­சிகள் எனக் கூறு­வது மிகவும் பொருத்­த­மா­னது எனக் கரு­து­கின்றேன்.

மேற்­படி விடயம் சம்­பந்­த­மாக  முன்­வைக்­கப்­பட்­டு­வரும் கோரிக்­கைகள்  நியா­ய­மா­னதும் காலத்­திற்­கேற்­ற­து­மாகும் என்­பதில் ஐய­மில்லை.  அதனைப் பெற்றுக் கொள்­ளு­ம­ள­விற்கு மலை­யகச் சமூகம் தற்­போது கல்­வித்­துறை உள்­ளிட்ட பல்­வே­று­து­றை­க­ளிலும் ஒப்­பீட்டு ரீதியில் (முன்னர் இருந்த நிலை­யை­விட) முன்­னே­றி­யுள்­ளது என்­பதை இலங்கை வர­லாற்றை நன்கு அறிந்த எவ­ராலும் மறுக்­க­வி­ய­லாது. அர­சியல் சமூகப் பொரு­ளா­தார உரி­மைகள் நீண்ட கால­மாக மறுக்­கப்­பட்டு, வஞ்­சிக்­கப்­பட்ட கூலித்­தொ­ழி­லா­ளர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டி­ருந்த மலை­யகத் தமிழ் மக்­க­ளி­டையே கல்வி, கலை, இலக்­கியம், அறி­வியல், வர்த்­தகம், விளை­யாட்டு போன்ற துறை­களில் ஏற்­பட்­டுள்ள இவ் வளர்ச்­சி­யா­னது குறைத்து மதிப்­பி­டப்­பட முடி­யா­தது.

இந்­நாட்டில் வாழ்­கின்ற ஏனைய இன சிறு­பான்­மை­யி­ன­ரான  இலங்கைத் தமி­ழர்கள் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் பிர­ஜா­வு­ரிமை, வாக்­கு­ரிமை போன்­றன பறிக்­கப்­பட்டு அர­சியல் உரி­மைகள் உள்­ளிட்ட சமூகப் பொரு­ளா­தார நலன்­களும் அற்­ற­வர்­க­ளாக மிகவும் துன்­புற்று அண்மைக் காலம் வரை தேசிய நீரோட்­டத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­டா­தி­ருந்த இம் மலை­யக மக்­களின் முன்­னேற்­ற­மா­னது இமா­லய சாத­னை­யாகும்.  இவ்­வா­றான ஒரு பின்­ன­ணியில் மலை­ய­கத்தில்  அமைக்­கப்­பட வேண்டும் எனக் கோரப்­ப­டு­கின்ற தேசிய பல்­க­லைக் ­க­ழகம் இச் சமூ­கத்தை அடுத்த கட்­டத்தை நோக்கி முன்­னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வ­தற்கு உதவும்.  

கேள்வி: இப்­பல்­க­லைக்­க­ழகம் மலை­யக சமூ­கத்­திற்­கான தனித்­து­வ­மான கல்வி நிறு­வ­ன­மாக இருக்க வேண்­டுமா?அல்­லது அனை­வ­ருக்கும் பொது­வான தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக இருத்தல் வேண்­டுமா?

பதில்:   அனைத்து இன மாண­வர்­களும் கற்கக் கூடிய பொது­வான ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக இருத்தல் அவ­சியம். அவ்­வாறு இல்­லா­த­வி­டத்து இப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்று வெளி­யேறும் மாண­வ­ருக்கு வழங்­கப்­படும் சான்­றி­தழின் அங்­கீ­காரம் பற்­றிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். இலங்­கையின் ஏனைய பிர­தே­சங்­களில் வாழும் சிறு­பான்மை இனங்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்றும் முக­மாக நிறு­வப்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களைப் போன்று பல்­லின மற்றும் பன்­ம­தங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் பயிலும் தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக அமைதல் வேண்டும். உதா­ர­ண­மாக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம், கிழக்­கி­லங்கைப் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் தென் கிழக்குப் பல்­க­லைக் ­க­ழகம் போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

எவ்­வா­றா­யினும் அமை­ய­வி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது இலங்­கையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான பல்­க­லைக்­க­ழகக் கல்­வி­மு­றை­யி­லி­ருந்து (ஏட்டுக் கல்வி) பெரிதும் விடு­பட்டு மலை­யக சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் முன்­னேற்­றத்­துக்­கான வாய்ப்­பு­களை(செய்­மு­றைப்­ப­யிற்­சி­க­ளு­ட­னான தொழிற்­கல்வி மற்றும் நவீன பாட­நெ­றிகள்) வழங்கும் ஒரு நிலை­ய­மாகக் காணப்­படல் வேண்டும் (தொழில்சார் பல்­க­லைக்­க­ழகம்). அதா­வது க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையில் சித்­தி­ய­டையும் மாண­வர்­க­ளுக்­கான முறைசார் கல்வி அடிப்­ப­டை­யி­லான இள­மாணிப் பட்­டங்­க­ளையும் பின்னர் அவர்­க­ளுக்கு டிப்­ளோமா மற்றும் முது­மாணிக் கற்கை நெறி­க­ளையும் வழங்கும் ஒன்­றாகச் சுருங்கி விடக்­கூ­டாது.  

மேலும் மாலை நேரங்­க­ளிலும் விடு­முறை நாட்­க­ளிலும் குறிப்­பாகப் பெருந்­தோட்டத் தொழி­லா­ள­ருக்­கான தொழில்சார் விரி­வாக்கல் நிகழ்ச்சித் திட்­டங்கள் (extension programmes) மற்றும் சமூக முன்­னேற்­றத்­துக்­கான கல்­வி­ய­றி­வூட்டல் போன்­ற­வற்­றையும் நடத்­துதல் வேண்டும். உதா­ர­ண­மாக இந்­தி­யா­விலும் அமெ­ரிக்­காவின் சில மாநி­லங்­க­ளிலும் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இவ்­வா­றான பட்டப் படிப்பு சாராத தொழி­லா­ள­ருக்­கான தொழில்சார் விரி­வாக்கல் நிகழ்ச்­சிகள் வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைக் கூறலாம். மேலும் இலங்­கையின் பெருந்­தோட்டக் கைத்­தொ­ழிலை நவீன மயப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­வி­யல்சார் ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்­கான கள­மா­கவும் இப் பல்­க­லைக்­க­ழகம் தனது வகி­பங்­கினை ஆற்­றலாம்.  

கேள்வி: மலை­ய­கத்­தி­லுள்ள ஆசி­ரி­யர்கள் இதன் மூலம் பயன்­பெ­றக்­கூ­டி­ய­தாக இருக்­குமா ?

பதில்:  நிச்­ச­ய­மாக.  மலை­ய­கத்­தி­லுள்ள கல்வி கற்­றோரில் பெரும்­பா­லானோர் உள்­வாங்­கப்­பட்­டுள்ள இலங்கை ஆசி­ரியர் சேவை­யி­லுள்­ளோ­ருக்­கான வாண்­மை­வி­ருத்­திக்­கான (professional development)  பாட­நெ­றிகள் மற்றும் செய­ல­மர்­வு­களை நடத்­து­வதும் இப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிர­தான பணி­களில் ஒன்­றாக இருத்தல் வேண்டும். ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வாண்மை விருத்தி நிகழ்ச்­சிகள் அல்­லது பாட­நெ­றிகள் ஏற்­க­னவே இலங்­கையில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் வழங்­கப்­படும் பொது­வான அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­க­மை­வா­னதும் மேலி­ருந்து -கீழ்­நோக்­கி­ய­து­மான (top-down) அணு­கு­மு­றை­யி­லி­ருந்து விடு­பட்டுப் பெருந்­தோட்டப் பாட­சா­லை­களில் கற்கும் மாண­வர்கள் பணி­யாற்றும் ஆசி­ரி­யர்கள்,  அதி­பர்கள் மற்றும் கல்­வி­ய­தி­கா­ரி­களின் குறிப்­பான பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை நோக்கிக் கொண்டு செல்­வ­தாக அமைதல் வேண்டும். மேலும் பெருந்­தோட்­டத்­து­றையின் கல்­வியில் நிலவும் குறிப்­பான பிரச்­சி­னைகள் பற்­றிய ஆய்­வு­களை விரி­வான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்கும் அவற்­றுக்­கான தீர்­வு­களைக்  காண்­ப­தற்கும் இப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூலம் பங்­க­ளிப்பை நல்க முடியும்.

அதே­வேளை, அமை­ய­வி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது பிர­தே­சத்தில் செறிந்து வாழும் சிறு­பான்மை இனங்­களின் கலை,  கலா­சார அடை­யா­ளங்கள் பேணப்­படும் விதத்­தி­லான பாட­நெ­றி­க­ளையும் நடத்­துதல் வேண்டும்.அவை தொடர்­பான ஆய்வு முயற்­சி­களை மேற்­கொண்டு அவற்­றுக்கு ஊக்­க­ம­ளிக்­கலாம்.

கேள்வி: அவ்­வாறு ஆரம்­பிக்­கப்­படும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு போதிய வளங்­களை வழங்க அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றதா?

பதில்:  வர­லாற்று ரீதி­யாக நோக்கின் அவ்வப் பிர­தேச அர­சியல் தலை­மை­களின் சமூகம் சார் கோரிக்­கைகள் மற்றும் அர­சியல் அழுத்­தங்­களின் விளை­வாக அமையப் பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் அர­சாங்­க­மா­னது உரிய பௌதிக, மானிட வளங்­களை வழங்­கி­யுள்­ளது. எனவே உத்­தேச பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் தென்­னி­லங்­கை­யி­லுள்ள ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களை ஒத்த வச­திகள் வழங்­கப்­படும் என்­பதில் ஐய­மில்லை.

கேள்வி:  பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை அமைப்­ப­தற்கு முன்னர் வளாகம் ஒன்றை ஆரம்­பிப்­பதில் தடைகள் இருக்­கின்­ற­னவா?

பதில்: எந்த தடை­களும் இல்லை. இலங்­கையின் உயர்­கல்வி வர­லாற்றில் அவ்­வாறு பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளாக ஆரம்­பிக்­கப்­பட்­டவை பின்னர் தனி­யான ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு எவ்­வித தடை­களும் இருக்­க­வில்லை.

கேள்வி: தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்கும் என்ற நம்­பிக்கை உள்­ளதா?

பதில்: எனக்கு மட்­டு­மன்றி சமூக அக்­க­றை­யுள்ள அனை­வ­ருக்கும் இம்­மு­யற்­சியில் ஆர்­வமும் அக்­க­றையும் நம்­பிக்­கையும் உள்­ளது. இடை­ய­றாது இதனை அடை­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­வ­துடன் குறிப்­பாக, இலங்கை அனு­ப­வத்­திற்­கி­ணங்க உரிய நேரத்தில் அர­சியல் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பதன் மூலம் இதனை வெற்றி கொள்­ளலாம்.

கேள்வி: மலை­யக சமூ­கத்­திற்­கான அர­சாங்கத் தொழில் என்றால் அது பெரும்­பாலும் ஆசி­ரியர் நிய­ம­னங்கள் மட்­டுமே என்ற நிலை எப்­போது மாறும்?

பதில்: இந் நிலையை மாற்­று­வ­தற்கு அர­சியல் தலை­மைகள் உள்­ளிட்ட சமூ­கத்தின் அனைத்து தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யான முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும். குறிப்­பாக, தமிழ் மொழியில் கல்வி நிர்­வாகம் மற்றும் பொது நிரு­வாக, உள்­ளூ­ராட்சி அலு­வல்கள், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் போன்­றன இடம்­பெறும், இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த சிங்­கள மொழியில் மேற்­படி அலு­வல்கள் நடை­பெறும் ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளிலும் செறி­வா­கவும் சித­றியும் வாழும் மலை­யகத் தமிழர் கல்வி நட­வ­டிக்­கைகள் தாய்­மொ­ழியில் (தமிழ்) இடம்­பெறும் பாட­சா­லை­களைத் தவிர ஏனைய இடங்­களில் மிகவும் அரி­தாகப் பணி­யாற்­று­வது ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க ஒன்­றல்ல.ஏனெனில் வடக்­குஇ கிழக்கு மாகா­ணங்­களில் ஆசி­ரியர் சேவை உள்­ளிட்ட ஏனைய அர­சாங்கத் துறை­களில் தமிழ் மொழியில் பணி­யாற்ற முடியும்.

ஆனால், பிற மாகா­ணங்­களில் வாழும் சிறு­பான்­மை­யினர் பிற­மொ­ழி­களில் (குறிப்­பாகச் சிங்­கள மொழி) ஆற்­றலைப் பெற்­றி­ருப்­பது இன்­றி­ய­மை­யா­தது. எனவே, ஆசி­ரியர் சேவை தவிர்ந்த ஏனைய அர­சாங்கத் தொழில்­து­றையில் பிர­வே­சிப்­ப­தற்கு மலை­ய­கத்தின் கற்ற இளை­ஞர்கள் மேல­தி­க­மாக முயற்­சிக்க  வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் இன விகி­தா­சா­ரத்­திற்­கி­ணங்கத் தொழில்­வாய்ப்­பு­களைப் பெற்றுக் கொள்­வதில் இவர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர். உதா­ர­ண­மாக மலை­யகத் தமிழர் பெரும்­பான்­மை­யாக வாழும் (ஐம்­பது சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக) நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  ஒரே ஒரு கல்வி வல­யத்தில் மட்­டுமே தமிழர் பணிப்­பா­ள­ரா­க­வுள்ளார். மேலும் பொது நிரு­வாகம், உள்­ளூ­ராட்சி, நீதித்­துறை மற்றும் ஏனைய நிறு­வ­னங்­களில் மிகச் சொற்­ப­ள­வான மலை­யகத் தமி­ழர்­களே அர­சாங்கப் பத­வி­க­ளி­லுள்­ளனர். இந்­நி­லை­மை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு அர­சியல் தலை­மைகள் மற்றும் சிவில் சமூ­கத்­தி­னரின் தொடர்ச்­சி­யான அழுத்­தமும் திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களும் இன்­றி­ய­மை­யா­தவை.

கேள்வி: மலை­ய­கத்தில் பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்ற  இந்த காலப்பகுதியில் இவர்கள் பல்வேறுதுறைகளில் உள்நுழையவேண்டும் என்ற கரிசனை உருவாகிவிட்டதா?

பதில்: இக்கருத்தை ஓரளவுக்கு ஏற்கலாம். இவ்வினாவை பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி க.பொ.த. சா.த., உ.த. பூர்த்தி செய்துள்ளோர் உள்ளிட்ட ஏனையோருக்கும் பயன்படும் வகையில் இங்கு கலந்துரையாட விரும்புகின்றேன்.

முன்னரை விடக் கரிசனை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இது உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியதே. அண்மைக் காலங்களில் அகில இலங்கை மட்ட சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து மலையகத்தைச் சேர்ந்த பலர்   SLEAS, SLTES, SLPS  போன்றவற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக சிலரும் கடமையேற்றுள்ளனர். இவை கல்வித்துறை சார்ந்த அடைவுகளாகும். எனினும், நீங்கள் இங்கு கருதுகின்ற ஏனைய துறைசார் (கல்வித்துறைசார) பதவி நிலைகளுக்கு (Sri Lanka Judicial Service, Sri Lanka Planning Service, Sri Lanka Foreign Service etc.) செல்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவானதாகும். இவை தவிரவும் முப்படை,பொலிஸ் சேவை, சுகாதாரத்துறையிலுள்ள தாதியர்சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கும் தாமாக முன்வந்து விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சை மற்றும் போட்டிப்பரீட்சைகளுக்குத் தோற்றுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.