உலகின் அதிகளவான பிளாஸ்டிக் பயனாளர்களை கொண்டுள்ள சீனாவானது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 

அதன்படி அழிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளை 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனாவின் முக்கிய நகரங்களிலும், 2022 ஆம் ஆண்டில் அனைத்து நகரங்களிலும் தடை செய்யவும் தீர்மானித்துள்ளது.

இதனால் 2020 ஆம் ஆண்டின் பின்னர் சீனாவில் உள்ள உணவங்களில் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது 1.4 பில்லியன் குடி மக்களின் பாவனையில் இருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்த முடியாமல் போராடி வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக சீனா முழுவதும் சேர்ந்துள்ள குப்பைகள் 100 கால்பந்தாட்ட மைதானங்களை நிரப்பக் கூடிய அளவில் உள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் மாத்திரம் சீனா 215 மில்லியன் தொன் நகர்புற வீட்டுக் கழிவுகளை சேகரித்துள்ளது. எனினும் இதன் மறுசுழற்சிக்கான புள்ளி விபரங்கள் வெளியாகவில்லை.

2010 ஆம் ஆண்டில் சீனா 60 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா சேகரித்துள்ளது. 

இந் நிலையில் சீனாவானது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான விசேட திட்டத்தை நேற்றைய தினம் முன்வைத்துள்ளது.

இந்த திட்டமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் செயற்படுத்தப்படும். 

அதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களிலும் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும், எனினும் புதிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக வர்த்தகர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 0.025 மில்லி மீற்றர் தடிப்பதற்திற்கும் குறைவான பிளாஸ்டிக் உற்பத்திக்கு முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதுடன், ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இவ்வாறான சீனாவின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டமானது இது முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அல்ல. இதற்கு முன்னரும் அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டில் சில்லறை விற்பனையாளர்களுக்கு இலவச பிளாஸ்டிக் பைகளை வழங்குவதை சீனா தடை செய்திருந்தது. மேலும் அரிய மெல்லிய பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதையும் தடை செய்தது.

மேலும் 2017 ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் சீனா - வெளிநாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.