இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தியா கையாளப் போகும் அணு­கு­முறை எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்கும் என்­பது, அண்­மைக்­கா­ல­மாக அர­சியல் இரா­ஜ­தந்­திர மட்­டங்­களில் முக்­கி­ய­மான பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கின்­றது.

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­மாற்­றத்தை அடுத்தே இந்த விவாதம் சூடு பிடித்­தி­ருக்­கி­றது. கடந்த நவம்பர் மாதம் ஆட்­சிக்கு வந்த பின்னர், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த 10 நாட்­க­ளுக்­குள்­ளா­கவே இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

அதற்குப் பின்னர், இந்த மாத தொடக்கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­தன புது­டெல்­லிக்­கான பய­ணத்தை மேற் கொண்டி­ருந்தார்.

அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தின் தொடக்­கத்தில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கிறார்.

இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டதையடுத்து, சீனா­வுக்குப் பயணம் செய்யும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் பயண நிகழ்ச்சி நிரல் இன்­னமும் இழு­ப­றி­யா­கவே இருந்து வரு­கி­றது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை, தமது நாட்­டுக்கு வரு­மாறு இந்தியாவின் போட்டி நாடு­க­ளான சீனாவும் பாகிஸ்­தானும் அழைப்பு விடுத்தி­ருக்­கின்­றன.

அந்தப் பய­ணங்­களில் இழு­ப­றிகள் காணப்­ப­டு­கின்ற போதும், புது­டெல்­லி­யுடன் சீரான உறவைப் பேணு­வதில் புதிய அர­சாங்கம் கவ­ன­மாக இருக்­கி­றது.

அதனால் தான், குறு­கிய காலத்­துக்­குள்­ளா­கவே ஜனா­தி­பதி, வெளி­வி­வகார அமைச்சர் ஆகியோர் புது­டெல்லி  சென்று திரும்­பி­யுள்­ளனர். பிர­த­மரும் பய­ணத்தை மேற்­கொள்ளத் தயா­ராகி வரு­கிறார்.

இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், சீனாவின் முத­லீடும் பொரு­ளா­தார உத­வி­களும் அதற்குத் தேவைப்­ப­டு­கி­ன்றன. இந்­தி­யாவின் ஆத­ரவும் நட்பும் அவ­சியம் என்ற நிலைப்­பாட்டிலும் இருக்­கி­றது.

இந்­தி­யாவைப் பகைத்துக் கொள்ளாமல், சீனாவின் பொரு­ளா­தார உத­வி­களைப் பெறு­வது அர­சாங்­கத்தின் திட்டம். அதனை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ புது­டெல்­லியில் கூட, வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

எனவே, இந்­தி­யாவை அர­வ­ணைத்து செல்லும் அணு­கு­மு­றையை மிகக் கவ­ன­மாக கடைப்­பி­டிக்க முனை­கி­றது கொழும்பு. இந்­தி­யா­வுடன் முரண்­பாட்­டையோ, பகை­மை­யையோ வளர்த்துக் கொள்­வது, நீண்­ட­கால ஆட்சி இலக்கை வைத்துச் செயற்­படும் ஆளும்­கட்­சி­யி­ன­ருக்கு ஆபத்­தாக முடி­யலாம் என்­பதால், மிகுந்த முன்­னெச்­ச­ரிக்­கை­யாக விடயங்கள் கையா­ளப்­ப­டு­கின்­றன.

ஆனாலும் தமிழர் பிரச்­சினை, அதி­கா­ரப்­ப­கிர்வு ஆகிய விட­யங்­களில் தான், இரண்டு நாடு­களும் அதிகம் முரண்­படும் நிலை காணப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இந்­தியா சென்­றி­ருந்த போது, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி 13 ஆவது திருத்­தச்­சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் வகையில், அனை­வ­ருக்கும் சம உரி­மைகள் அளிக்­கப்­பட்டு நீதி­யான, நியா­ய­மான தீர்வு காணப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அந்த இடத்தில், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எந்தக் கருத்­தையும் வெளி­யி­டாத போதும், பின்னர் இந்­திய ஊட­கங்­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பு­களில், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை என்று தெளி­வாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதற்குப் பின்னர், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி அவர் பெரும்­பாலும் பேச­வே­யில்லை. தமி­ழர்­க­ளுக்கு நாட்டில் பிரச்­சினை ஒன்று உள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்ளும் நிலைப்­பாட்டில் அவர் இல்லை. அபி­வி­ருத்தி மூலம் எல்லாப் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­படும் என்­பதே அவ­ரது சித்­தாந்தம்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­காரி. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு கிளர்ச்­சி­களை ஒடுக்கும் வழி­மு­றைகள் பற்­றிய ஏரா­ள­மான கற்கை­நெ­றிகள் தற்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யாவில் இட­து­சாரி நக்­சலைட் கிளர்ச்­சிகள் ஏராளம் உள்­ளன. இது இந்­தி­யா­வுக்கு சவா­லான ஒரு விடயம். நக்­சலைட் கிளர்ச்­சி­க­ளுக்கு மூல­கா­ரணம், அபி­வி­ருத்­தியில் கிரா­மங்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது, கிரா­மப்­புற மக்­க­ளுக்கு அடிப்­படை வச­திகள் மறுக்­கப்­ப­டு­வது தான்.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்து, நக்­சலைட் ஆதிக்கம் உள்ள பகு­தி­களில் அபி­வி­ருத்தி வேலை­களை மேற்­கொள்­வது, கல்வி வச­தி­களை அளிப்­பது, வேலை­வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுப்­பது போன்ற மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கும் முனைப்­புகள் கையா­ளப்­ப­டு­கின்­றன. இது சில இடங்­களில் வெற்றி பெற்­றி­ருந்­தாலும், பல இடங்­களில் வெற்றி கிட்­ட­வில்லை. இந்­தி­யா­விடம் கிளர்ச்சிகளை ஒடுக்கும் கற்­கை­நெ­றி­களை இலங்கை இரா­ணு­வமும் கற்று வரு­கி­றது.

ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யாக  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ,

 தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் நக்­சலைட் பிரச்­சி­னையைப் போலவே புரிந்து கொண்­டி­ருக்­கிறார் போலத் தெரிகி­றது.

கல்வி உரிமை மறுக்­கப்­பட்­டதால், வேலை­வாய்ப்­பு­களில் புறக்­க­ணிக்­கப்­பட்­டதால், அபி­வி­ருத்­தியில் ஒதுக்­கப்­பட்­டதால், மொழி உரிமை மறுக்­கப்­பட்­டதால் தான், தமி­ழர்கள் தனி­நாடு கோரி போராட்­டத்தில் இறங்­கினர் என்ற புரி­தலின் அடிப்­ப­டை­யி­லேயே, அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்து விடும் என்­பது, அவ­ரது கணிப்­பாக இருக்­கலாம்.

தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் அவற்­றுக்கு அப்­பாற்­பட்­டது என்­பதை, இரா­ணுவ மொழி­யி­லேயே விளங்கிக் கொள்ளும் ஒரு ஜனா­தி­பதி எந்­த­ள­வுக்குப் புரிந்து கொள்வார் என்­பது கேள்விக்­கு­றிதான்.

இவ்­வா­றான ஒரு நிலையில் தான் இலங்கை விவ­கா­ரத்தை இந்­தியா எப்­படிக் கையாளப் போகி­றது என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

எப்­போது, எந்த இடத்தில், யாரை முன்­னி­றுத்தி மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பது இரா­ஜ­தந்­தி­ரத்தின் முக்­கி­ய­மான அம்சம். அதனை இந்­தியா புரிந்து வைத்­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­தன புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொண்டு விட்டுத் திரும்­பினார்.

அவ­ரிடம் அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து பேசப்­பட்­டதா? என்று கேள்வி எழுப்­பிய போது, அது­பற்றி பேச­வில்லை. வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு உட்­பட்ட நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தேன் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதன் மூலம், அதி­கா­ரப்­ப­கிர்வு விவகாரம் வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு உட்­பட்ட விவ­காரம் அல்ல, அது ஒரு அர­சியல் விவ­காரம் என்று,  தினேஸ் குண­வர்­தன, பூட­க­மான முறையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

13 ஆவது திருத்­தச் ­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை. என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வலி­யுறுத்திக் கூறிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தரப்­புகள், இந்த விட­யத்தில் இந்­தியா தலை­யீடு செய்ய வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இது­பற்றிப் பேசு­வ­தற்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­திக்கும் முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன.

ஆனாலும், புதிய அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குணவர்­த­ன­வுடன், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் நடத்­திய பேச்­சுக்­களில் 13ஆவது திருத்தம் குறித்தோ, அதி­கா­ரப்­ப­கிர்வு பற்­றியோ பேசப்­ப­ட­வில்லை.

எனினும், 13 ஆவது திருத்தம் உள்­ளிட்ட விவ­கா­ரங்கள், கைவி­டப்­பட்டு விட­வில்லை என்று இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­யான ஷிசிர் கோத்­தாரி உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­த­ன­வுடன் இது­பற்றிப் பேசிப் பய­னில்லை என்ற முடி­வுக்கு இந்­தியா வந்­தி­ருக்­கி­றது என்றே கருத வேண்டும்.

யாருடன், எப்­போது, எங்கு பேச வேண்டும் என்ற இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றையை  இந்­தியா கையா­ளு­கி­றது. தினேஸ் குண­வர்தன இட­து­சா­ரி­யாக காட்டிக் கொண்­டாலும் தமிழர் பிரச்­சினை, அதி­கா­ரப்­ப­கிர்வு போன்ற விட­யங்­களில் ஒரு இன­வா­தி­யா­கவே நடந்து கொண்­டி­ருக்­கிறார்.  இது முத­லா­வது.

தினேஸ் குண­வர்­தன மஹிந்த ஆத­ரவு வட்­டத்தில் முக்­கி­ய­மா­ன­வ­ராக இருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியில் அவர் இருக்­க­வில்லை. இது இரண்­டா­வது விடயம்.

எனவே, தினேஸ் குண­வர்­த­ன­விடம் அதி­கா­ரப்­ப­கிர்வு பற்­றியோ, 13 ஆவது திருத்தம் குறித்தோ பேசு­வதால் ஒன்றும் நடக்கப் போவ­தில்லை என்ற கருத்து இந்­தி­யா­விடம் இருக்­கி­றது. இது மூன்­றா­வது விடயம்.

அவ்­வா­றாயின் இந்த விவ­கா­ரத்தை இந்­தியா எப்­படி, யாரை வைத்துக் கையாளப் போகி­றது?

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அடுத்த மாதம் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொள்ளும் போது, இந்த விவ­கா­ரத்தை புது­டெல்லி கையில் எடுக்கும் வாய்ப்­புகள் உள்­ளன.

மஹிந்த ராஜபக் ஷ தான், இந்­தி­யா­வுக்கு, 13க்கு அப்­பா­லான தீர்வு குறித்து வாக்­கு­றுதி கொடுத்­தவர். கோத்­தா­பய ராஜபக் ஷவைப் போல நறுக்­கென பதி­ல­ளிக்­கா­தவர் அவர்.  நிதா­ன­மாக முடி­வெ­டுக்கக் கூடி­யவர்.

மஹிந்த ராஜபக் ஷ இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொள்ளும் போது, அவரைக் கொண்டு, அதி­கா­ரப்­ப­கிர்வு பற்­றிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­மாறு, 13 ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு இந்­தியா கோரும் என்றே தெரி­கி­றது.

இந்த இடத்தில்  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் குர­லாக மஹிந்த ராஜபக் ஷ செயற்­பட முடி­யாது. ஏனென்றால், தனது வழி­காட்­டலில் தான், கோத்­தா­பய ராஜபக் ஷ செயற்­ப­டுவார் என்று மஹிந்த ராஜபக் ஷ தேர்­தலின் போது கூறி­யி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவே அர­சியல் முடி­வு­களை எடுப்பார். தான் ஒரு நிர்­வா­கி­யா­கவே இருப்பேன் என்றே கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூறி­யி­ருந்தார்.

எனவே, அர­சியல் விவ­கா­ரங்­களை மஹிந்த ராஜபக் ஷவின் மூலம் கையா­ளு­வதே பொருத்தம் என்று இந்­தியா கருதும். அவர் கோத்­தா­பய ராஜபக் ஷவை காரணம் காட்டி தப்­பிக்­கவும் முடி­யாது. ஏனென்றால் தான் சொல்­வ­தன்­ப­டியே, தனது ஆலோ­ச­னைப்­ப­டியே கோத்­தா­பய ராஜபக் ஷ செயற்­ப­டு­கிறார் என்று கூட, மஹிந்த ராஜபக் ஷ வார்த்­தை­களை கொட்டி விட்டார்.

மஹிந்த ராஜபக் ஷவின் இந்தியப் பயணத்தின் போது, 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பேசப்படும் சூழலில் அவர் எப்படி அதற்கு பதிலளிக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாக இருக்கிறது.

எனினும், இந்தியா இந்த விவகாரத்தை காதும் காதும் வைத்த மாதிரிக் கையாளவே முனையும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா போன்ற போட்டி நாடுகளின் நட்பு வட்டத்தில் உள்ள ராஜபக் ஷ சகோதரர்களின் அரசாங்கத்தை, அந்தப் பக்கம் சாய்ந்து கொள்வதற்கு இந்தியா அனுமதிக்காது.

எனவே, கொழும்புடன் இடைவெளி வந்து விடாதபடி, உறவுகளைப் பேணவே முனையும். அதற்காக இந்தியா, பின்கதவு இராஜதந்திரத்தைக் கையாளும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

எது எவ்வாறாயினும், தமிழகத்தில் மீண்டும் இலங்கைத் தமிழர் விவகாரம் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் அதனை மறந்து விட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர், அதிகாரப்பகிர்வு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிவரத் தான் வேண்டியிருக்கும்.

- ஹரிகரன்