எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதிர்­கொள்­வதில் எல்லா அர­சியல் கட்சி­களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்­கின்­றன. ஆட்­சியை மீண்டும் கைப்­பற்றிக் கொள்ள வேண்­டு­மென்­பதில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் பொது­ஜன பெர­மு­னவும் முனைப்பு காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.  அதே­வேளை,  சிறு­பான்­மை­யினக் கட்­சிகள் ஆட்­சியின் பங்­கா­ளி­க­ளாக இருப்­ப­தற்கு வெற்றி, தோல்வி கணிப்­புக்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு அர­சியல் கட்சிகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் பௌத்த இன­வா­திகள் தங்­களின் இன­வாத புரா­ணங்­களை பாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  ஆட்சி அதி­கா­ரத்­துக்­கான போட்டி, இன­வாத சிந்­த­னைகள்,  சிறு­பான்­மை­யி­னரின் அபிலாஷை­களை முற்­றாக புறக் ­க­ணிக்கும் மனப்­பாங்கு என்­ப­வற்றுக் கிடையே இலங்கை மாட்­டி­யுள்­ளது. 

இவ்­வி­த­மாக தொடர்ந்து செல்­லு­மாயின், இலங்­கையின் எதிர்­காலம் என்­பது சூனி­ய­மா­கவே இருக்கும் என்­பதில் ஐய­மில்லை.  எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்கள் இன­வாத கரு மேகங்­களைக் கொண்­ட­தா­கவே இருக்கும் என்­ப­தற்கு தற்­போது தெரி­விக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்கள் எடுத்துக் காட்­டாக திகழ்­கின்­றன.

சிங்­கள பௌத்­தர்­களின் ஆத­ரவு
பௌத்த மக்­களின் பெரும் ஆத­ர­வினால் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றிக் கொண்ட பொது­ஜன பெர­முன, பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் அத்த­கைய­தொரு வெற்­றியை இலக்கு வைத்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.  ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு சிங்­கள பௌத்த மக்­களின் பெரும் ஆத­ரவே பிர­தான கார­ண­மாகும்.  சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவை உச்­ச­அ­ளவில் பெற்றுக் கொள்­வ­தற்கு ஏற்­ற­வாறே தேர்தல் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.  பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களும், அமைப்­புக்­களும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்­கு­ரிய அனைத்து காரி­யங்­க­ளையும் செய்­தி­ருந்­தார்கள்.  இதனால், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி தனியே பௌத்த சிங்­கள மக்­களின் வெற்­றி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது.  ஆயினும், சிறு­பான்­மை­யி­னரும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி கொண்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வெற்றி கொள்ள வேண்­டி­ய­ தொரு கட்­டாயம் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு இருக்­கின்­றது.  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆட்­சி­ய­மைக்கும் அள­வுக்­கா­வது 113 ஆச­னங்­களைப் பெற்றுக் கொண்­டால் தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்ற வெற்­றி­யினை முழு­மை­யாக ருசிக்க முடியும்.  இதனால், ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களை கவர்ந்து கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்­திய அதே தந்­தி­ரோ­பா­யத்­தையே பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளார்கள். இதனை பொது­ஜன பெர­மு­ன­வி­னரின் கருத்­துக்­களின் மூல­மாக உணர்ந்து கொள்ளக் கூடிய­தாக இருக்­கின்­றது.  அதே­வேளை, பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதித் தேர்­தலில் கையாண்ட பௌத்த மேலா­திக்க பிர­சா­ரத்தை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கைவிட்டு, சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளையும் அதி­க­மாக பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று திட்­ட ­மி­டு­மாயின் பௌத்த சிங்­கள மக்­களின் வாக்­கு­களில் பெரும் எண்­ணிக்­கையை இழக்க வேண்­டி­ய­தொரு நிலைமை ஏற்­படும்.  அதனால், பொது­ஜன பெர­மு­ன­வினால் சிங்­கள பௌத்த மேலா­திக்கச் சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­பட முடி­யா­த­தொரு அர­சியல் சூழலும் உள்­ளது.

பொது­ஜன பெர­மு­ன­வினர் தமது பிர­சா­ரங்­கங்­களின் மூல­மாக மூன்றிலிரண்டு பெரும்­பான்­மையை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்ற எண்­ணத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும் தமது இறுதி இலக்கு ஆகக் குறைந்­தது 113 ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்­வ­தா­கவும் இருக்க வேண்­டு­மென்று இருக்­கின்­றார்கள்.  இதே­வேளை,  ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்றுக் கொண்ட வாக்­கு­களின் அடிப்­ப­டையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினை பெற்றுக் கொள்ள முடி­யு­மென்று தெரி­விக்கும் அர­சி­யல்­வா­தி­களும் உள்­ளார்கள்.  ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­முன பெற்றுக் கொண்ட வாக்­கு­களை மாவட்ட அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது சுமார் 105 ஆச­னங்­க­ளையே ஆகக் கூடு­த­லாக பெற்றுக் கொள்ள முடி­யு­மென்று அர­சியல் ஆய்­வா­ளர்­களின் கணிப்பீடுகள் தெரி­வித்­துள்­ளன.

இதே­வேளை,  ஜனா­தி­பதித் தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ளரின் தோல்­விக்கு பௌத்த சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெரும்­பான்­மை­யாக பெற்றுக் கொள்­ளா­மையே கார­ண­மாகும்.  ஐக்­கிய தேசியக் கட்சி சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தமது கொள்கை­யையும் பிர­சா­ரத்­தையும் அமைத்துக் கொள்­ள­வில்லை என்ற குற்­றச் ­சாட்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரால் முன்வைக்­கப்­பட்­டுள்­ளன.  இதனால், பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சிங்­கள பௌத்­தர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய மாற்றுத் திட்­டங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி வகுத்து செயற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  இதன் அடிப்­ப­டை­யில்தான் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரால் 113இற்கும் அதி­க­மான ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­ மென்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டாலும் அதனை ஒரு மிகைப் ­ப­டுத்­த­லான பிர­சாரம் என்­று தான் சொல்ல வேண்டும்.  எவ்­வா­றா­யினும், பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த ­வொரு அர­சியல் கட்­சிக்கும் அறுதிப் பெரும்­பான்மை கிடைப்­பது என்­பது மிகக் கடி­ன­மா­ன­தா­கவே இருக்கும் என்றே தெரிவிக்கப்­ப­டு­கின்­றது.

சிறு­பான்­மை­யினக் கட்­சிகள்
சிறு­பான்­மை­யினக் கட்­சி­களில் மனோ கணேசன் தலை­மையில் உள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி,  முஸ்லிம் காங்­கிரஸ்,  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்தே பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  ஐக்­கிய தேசியக் கட்சி தமது தோழமைக் கட்­சிகள் யாவும் தனித்துப் போட்­டி­யி­டாது ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானை சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்­டு­மென்று திட்­ட­மிட்­டுள்­ளது. அவ்­வாறு போட்­டி­யிடும் போதுதான் அதிக ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் கரு­து­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்சி தோழமைக் கட்­சிகள் யாவும் யானை சின்­னத்­தில்தான் போட்­டி­யிட வேண்­டு­மென்று விரும்பினாலும் அல்­லது திணித்­தாலும் எல்லா மாவட்­டங்­க­ளிலும் தோழமைக் கட்­சிகள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் திட்­டத்­துக்கு பணி­யுமா என்­பதில் சந்தே­கங்கள் உள்ளன.  குறிப்­பாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட வேண்­டு­மென்று அம்­பாறை  மாவட்­டத்­தி­லுள்ள அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  இதே நிலைப்­பாட்­டி­னையே அக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் பலரும் கொண்­டி­ருப்­ப­தாக தெரிய வரு­கின்­றது.

அம்­பாறை   மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து முஸ்லிம் காங்­கி­ரஸும் மக்கள் காங்­கி­ரஸும் இணைந்து போட்­டி­யிடும் போது அதன் மூல­மாக முஸ்லிம் காங்­கி­ரஸை சேர்ந்­த­வர்­களே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். ஏனெனில் அம்­பாறை  மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளி­டையே முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­குத்தான் அதிக செல்­வாக்கு இருக்­கின்­றது. அத்­தோடு, இவ்­வாறு இணைந்து போட்­டி­யிடும் போது மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை பெற்றுக் கொள்­ளாது போகும் போது மக்கள் காங்­கிரஸ் செல்­வாக்கு அம்­பாறை மாவட்­டத்தில் பெரும் வீழ்ச்­சியை ஏற்­படுத்­தி­ விடும். அதேவேளையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு அம்­பாறை மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள சரி­வினை சீர்­செய்­வ­தற்கும் முடி­யு­மாக இருக்கும். அம்­பாறை   மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மென்று அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்கள் விரும்­பு­கின்­றார்கள் என்ற போதிலும், முஸ்லிம் காங்­கி­ரஸின் வழ­மை­யான மூன்று வேட்­பா­ளர்கள் விட­யத்தில் அக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் அலுத்தும், வெறுத்தும் போயுள்­ளார்கள். இதனால், முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் புதிய வேட்­பா­ளர்­களை எதிர்பார்க்­கின்­றார்கள்.

அம்­பாறை மாவட்­டத்தில் மக்கள் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யி­டு­மாயின் ஒரு ஆச­னத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்­புள்­ளது. மேலும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்து போட்­டி­யிட்டால் இரண்டு ஆச­னங்­களை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். அந்த இரண்டு பேரும் முஸ்லிம் காங்­கி­ரஸின் வேட்­பா­ளர்­க­ளாக இருப்­பார்கள் என்று சொல்ல முடி­யாது.

அதே­வேளை, திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தில் பொது­ஜன பெர­முன அம்­பாறை தொகு­தியில் மாத்­திரம் 89ஆயி­ரத்து 674 வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. இதனால், பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து போட்­டி­யிடும் தோழமைக் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அது சாத்தியமா என்­ப­துதான் கேள்­வி­யாகும்.

இதே­வேளை, இம்­முறை அம்­பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது வாக்­கு­களை பல கட்­சி­க­ளுக்கும் அளிக்கும் சூழ் ­நி­லையும் உள்­ளது. அம்­பாறை மாவட்ட தமி­ழர்­களின் வாக்­கு­களை சித­ற­டிக்கும் முயற்­சி­களை ஒரு சில தமிழ்க் கட்­சிகள் மேற்­கொண்­டி­ருக்­கின்­றன. ஆதலால், தமி­ழர்கள் தமது பாரா­ளு­மன்ற பிர­தி­ நி­தித்­து­வத்தை பாது­காத்துக் கொள்ளும் வகையில் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டியுள்­ளது.

முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் கிழக்கு மாகா­ணத்தில் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் வன்­னி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்டால் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தித்­துவம் இல்லாமல் போகும் அபா­யமும் இருக்­கின்­றது. திரு­கோ­ண­மலை, மட்­டக் ­க­ளப்பு, வன்னி மாவட்­டங்­களில் முஸ்லிம் காங்­கி­ரஸை விடவும் மக்கள் காங்­கி­ர­ஸுக்கே செல்­வாக்கு அதி­க ­மாகும். அதனால், இம்­மா­வட்­டங்­களில் மேற்­படி மூன்று கட்­சி­களும் இணைந்து போட்­டி­யி­டு­வது என்­பது முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு சில­வேளை ஆபத்­தாக அமை­யலாம்.

இதே­வேளை, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கே அதிக சந்­தர்ப்­பங்கள் உள்­ளன. இங்கு இவ்­விரு முஸ்லிம் கட்­சி­களும் விட்டுக் கொடுப்பின் அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்­களை நிறுத்தும் போதுதான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களை பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழக்கம் போன்று தனித்தே போட்­டி­யிடும்.

ஆட்­சியின் பங்­காளி

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் அறுதிப் பெரும்­பான்­மையை பெற்றுக் கொள்­ளாது போகும் போது சிறு­பான்­மை­யினக் கட்­சி­க­ளுடன் இணைந்­துதான் ஆட்­சி­ய­மைக்க வேண்­டி­யேற்­படும்.

குறிப்­பாக முஸ்லிம் கட்­சிகள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்­டாலும், ஆட்­சியின் பங்­கா­ளிகள் என்ற நிலையை அடைந்து கொள்­வ­தற்கே அக்­கட்­சிகள் விரும்பும். இதே­வேளை, ஆட்சி அமைப்­ப­­தற்கு முஸ்லிம் கட்­சி­களின் ஆத­ர­வையும் பேரி­ன­வாத கட்­சிகள் கேட்கும். தேர்தல் பிர­சா­ரங்­களின் போது என்­னதான் குற்­றச்­சாட்­டுக்­களை சிறு­பான்­மை­யினக் கட்­சி­களின் மீது சுமத்­தி­னாலும், அத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் பெரும்­பாலும் தேர்­தலை வெற்றி கொள்­வ­தற்­கா­க­வே­யாகும்.

இதே­வேளை, இம்­முறை நடை­பெ­ற­ வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஆட்­சியின் பங்­காளர் என்ற நேரடி அந்­தஸ்தை பெறும் நிலையும் உள்­ளது. கடந்த அர­சாங்­கத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு ஆட்­சியின் மறை­முக பங்­கா­ளிகள் போன்று செயற்­பட்டுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய அர­சியல் சூழல்
ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் நாட்டில் புதி­ய­தொரு அர­சியல் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழமைபோன்று எதிர்க்­கட்­சியிலிருந்து செயற்­ப­டு­மாயின் பின்­ன­டை­வு­க­ளையும் மக்­களின் பெரும் எதிர்ப்­பி­னையும் சந்­திக்க வேண்­டி­யேற்­ப­டலாம். அதனால், ஆட்­சியின் பங்­காளி என்ற நிலை­யி­லி­ருந்து கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு சாத்­தி­ய­மா­ன­வற்றை பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வடிக்கைகளை எடுக்க முடியும்.

மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் ஜனா­தி­ப­தி­யாக இருந்தபோது தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு பல சுற்று பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன. ஒரு கட்­டத்தில் இனப் பிரச்­சி­னைக்கு தீர்­வாக (13 பிளஸ்) அர­சியல் யாப்பில் 13ஆவது திருத்­தத்தில் உள்ள அதி­கா­ரங்­களை விடவும் கூடு­த­லான அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு தயார் என்று மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். ஆயினும், நடை­பெற்ற அனைத்து சுற்று பேச்­சு­வார்த்­தை­களும் வெறும் ஏமாற்று வித்­தை­யா­கவே முடிவுற்­றன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கூட இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வினை வழங்­குவோம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. பேச்­சு­ வார்த்­தைகள் நடை­பெற்­றன. உத்­தேச அர­சியல் யாப்­புக்­கு­ரிய நகல் திட்­டமும் வெளி­யி­டப்­பட்­டது. ஆனால், எத­னையும் அடைய முடி­ய­வில்லை.

தற்­போது நாட்டில் இனப் பிரச்­சினை இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக தமிழ் மக்­களை ஏமாற்­றி­யது போன்று ஏமாற்ற மாட்டோம். ஒற்றை ஆட்­சியின் கீழ் நாடு ஆட்சி செய்­யப்­படும். மாகாண சபை முறைமை தேவை­யற்­றது என்­பன போன்ற கருத்­துக்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்த காலங்­களில் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு தருவோம் என்று ஏமாற்று­வ­தற்­காக பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றாலும், பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றமையால் இனப் பிரச்­சினை இருக்­கின்­றது என்­ப­தனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தற்­போது நாட்டில் இனப்பிரச்­சினை கிடை­யாது என்று சொல்­லு­வதன் மூல­மாக அர­சியல் தீர்­வுக்கு இடமே கிடை­யா­தென்று தெரிகின்­றது.

அதுமட்­டு­மன்றி, இன அடிப்­ப­டை­யி­லான கட்­சி­களை தடை செய்ய வேண்டு­மென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பொது­வாக பேரி­ன­வாதக் கட்சிகள் பௌத்த மதத்­துக்கும், சிங்­கள மக்­க­ளுக்கும் உரித்­தான கட்­சி­க­ளா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதனால், பேரி­ன­வாத கட்­சி­களும் இனம் சார்ந்­துதான் செயற்­ப­டு­கின்­றன. ஆதலால், இன ­ரீ­தி­யாக செயற்­படும் கட்சி­களை தடை செய்­வ­தாக இருந்தால் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளையும் தடை செய்ய வேண்டும்.

ஒரு இனத்தின் அல்­லது சமூ­கத்தின் பெயரால் உள்ள அர­சியல் கட்­சியால் மாத்­தி­ரமே அந்தக் கட்சி பிர­தி­ நி­தித்துவப்­ப­டுத்தும் மக்­களின் உண்­மை­யான அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்த முடியும். ஆதலால், இனத்தின் அல்லது சமூகத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் இருப்பதனை குற்றமாக கருத முடியாது. ஆனால், அத்தகைய கட்சிகள் அடுத்த இனத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை மறுக்குமாயின் அறநெறிக்கு மாற்றமாக அடுத்த இனத்தின் அடையாளங்களை அழிக்க முற்படுமாயின் அவற்றை தடை செய்ய வேண்டும். ஆனால், பேரினவாத கட்சிகள்தான் இத்தகைய இனவாத அடிப்படையில் செயற்பட்டு கொண்டிருக்கின்றன.

சமூகங்களுக்கு இடையே பல பிரச்சினைகள் உள்ளன. அவையாவும் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளாகவே இருக்கின்றன. ஆயினும், அரசியல் கட்சிகள் அப்பிரச்சினைகளுக்கு இனம், மதம், மொழி போன்ற நிறங்களை பூசி பிரச்சினைகளை பூதாகாரமாக்கி வைத்துள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பது பற்றி பேசினாலே தேசத்துரோக செயலாக பார்க்கின்றனர். பல்லின மக்களின் தனித்துவம், அபிலாஷைகளை அங்கீகரிக்காததனால் தான் இந்த சிந்தனைகள் உருவாகின்றன. சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகள் பல்லினங்களை கொண்ட நாடுகளாக இருக்கின்றன. அங்கு வாழும் பல்லின மக்களின் அபிலாஷைகளை அங்குள்ள அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டமையாலும் நாட்டினை ஆட்சி செய்வதற்கு நல்ல கொள்கைகளை வகுத்துக் கொண்டதனாலும் அந்நாடுகள் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளன. அரசியல் முதிர்ச்சி ஏற்படும் போதுதான் இத்தகைய நல்ல தன்மைகளை காணலாம்.

இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அரசியல் முதிர்ச்சியில்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் கூறுகளை கூர்மைப்படுத்துவதற்கு பதிலாக, மழுங்கடித்துக் கொண்டிருக் கின்றார்கள்.

சஹாப்தீன்