மன்னார் பேசாலைப்பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படவுள்ள காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதகங்களும் ஏற்படாது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து வவுனியா ஊடாக மன்னாருக்கு எடுத்து செல்லப்படும் காற்றாலைகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா - மன்னார் வீதியூடாக எடுத்து செல்லப்படுகின்றது. 

இதற்கான அனுமதிகள் உட்பட பொலிசாரின் பாதுகாப்புக்கள் என்பன பெற்றுக்கொள்ளப்பட்டே பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் இன்றி இவற்றை இரவில் எடுத்து செல்லப்படுகின்றன. 

பேசாலைப்பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படும் குறித்த காற்றாலைகளினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரம் இலங்கை மின்சார சபையினருக்கு வழங்கப்படும். பல வெளிநாடுகளில் இவ்வாறு காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பல நன்மைகளும் கிடைத்து வருகின்றன.

எனினும் பேசாலைப்பகுதியில் பொருத்தப்படும் காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்று ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளதென்று மேலும் தெரிவித்துள்ளனர்.