2020 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 7 முறை அவுஸ்திரேலிய பகிரங்க கிண்ணத்தை வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ‘நம்பர் வன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

கடின தரை போட்டியான இதில் சிறந்த நிலயைில் உள்ள ஜோகோவிச் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. அவர் முதல் சுற்றில் ஜான் லெனர்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) சந்திக்கிறார்.

தரவரிசையில் முதல் 10 இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), டொமினிக் திம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பாப்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள்.

ஒற்றையர் பிரிவில் கால்பதிக்கும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த தரவரிசையில் 122 ஆவது இடம் வகிக்கும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 144 ஆம் நிலை வீரர் தட்சுமோ இட்டோவை (ஜப்பான்) சந்திக்கிறார். குணேஸ்வரன் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2 ஆவது சுற்றில் ஜோகோவிச்சுடன் மோத வேண்டி வரலாம்.

பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிற்னர். அதன்படி‘நம்பர் வன்’ வீரங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் சுற்றில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) சந்திக்கிறார். 

அண்மையில் அடிலெய்டு டென்னிசில் கிண்ணத்தை வென்ற ஆஷ்லி பார்ட்டி, அவுஸ்திரேலிய ஓபனை 42 ஆண்டுகளாக எந்த உள்நாட்டவரும் கிரீடம் சூடியதில்லை என்ற நீண்ட கால குறையை தணிக்கும் உத்வேகத்துடன் களம் காணுகிறார்.

இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் வாகை சூடும் வாய்ப்பில் உள்ளார். 

அண்மையில் ஆக்லாந்து ஓபன் பட்டத்தை கைப்பற்றிய செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் ரஷ்யாவின் 18 வயதான அனடசியா போட்டாபோவாவை எதிர்கொள்கிறார். 

இந்த பட்டத்தை செரீனா சொந்தமாக்கினால், பெண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அவுஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். 

நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆகியோரும் எதிர்பார்ப்புக்குரிய வீராங்கனைகளாக கவனிக்கப்படுகிறார்கள். .

குழந்தை பெற்றதால் 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்த இந்தியாவின் சானியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்ததுடன் அதில் இரட்டையர் பிரிவில் பட்டமும் வென்று அசத்தினார். அவுஸ்திரேலிய பகிரங்க தொடரிலும் அவர் இரட்டையர் பிரிவில் நாடியா கிச்செனோக்குடன் (உக்ரைன்) கைகோர்த்து களம் இறங்குகிறார்.