கின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின் ஒன்றுக்கூடல் மூலம் இக்கின்னஸ் உலக சாதனையை மேற்கொள்ள இலங்கை இரட்டையர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்வு இன்று (20.01.2020) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் வயது வித்தியாசமின்றி இரட்டையர்கள் பங்குபற்ற முடியுமெனவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது. 

மேற்படி போட்டியில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ள, பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழுடனும், தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றுடன் இன்று காலை 10 மணிக்கு முன்னர் வருகை தருமாறும் அந்த சங்கம் கேட்டுள்ளது.

அதேபோல் 18 வயதுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள் தமது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றை கொண்டுவர வேண்டும் எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை இரட்டையர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தந்தெனிய, இலங்கையின் புகழை உலகுக்கு கொண்டுச் செல்ல நாடு முழுவதும் உள்ள இரட்டையர்கள் முன்வரவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.