இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி, நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுடான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது நேற்றைய தினம் பெங்களூரில் இடம்பெற்றது.

இப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபாரமான இணைப்பாட்டத்தினால் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மொத்தமாக 91 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களை குவித்தார்.

நேற்றைய இன்னிங்ஸில் கோலி 22.3 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தலைவராக இருந்து 5000 ஓட்டங்களை விரவாக கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தலைவராகவிருந்து 5000 ஓட்டங்களை விரவாக பெற்ற வீரர் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தலைவராகவிருந்து 5000 ஓட்டங்களை பெற்ற வீரர் பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலிடத்திலும் (82), இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி (127) இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் (131) இரண்டாம் இடத்திலும், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிரேம் ஸ்மித் (135) மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி (136) நான்காம் இடத்திலும் உள்ளனர்.

31 வயதான விராட் கோலி இதுவரை 245 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 43 சதங்கள், 57 அரைசதங்கள் அடங்கலாக 11792 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.