கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் பயணிகள் வருவதை சோதனையிட கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னதாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்த வைரஸ் தொற்று காரணமாக பயணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை, எனவே எந்தவொரு பயணக் கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்த இலங்கை தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான தொற்று வான்வழி நோய்களையும் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை பொதுமக்களுக்கு தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சீனாவுக்கு செல்வோர் முகமூடி அணியுமாறும் முடிந்தவரை நெரிசலான பொது இடங்களைத் தவிர்க்குமாறும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன் கைக்குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் முடிந்தவரை நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

கைகளை அடிக்கடி சோப்புடன் கழுவ வேண்டும். முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது தொற்றுநோயியல் பிரிவு வழங்கிய மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ் நோயின் காரணமாகவே இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கொரோனா என்ற வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் ஒன்று சீனாவில் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அமைச்சு இது தொடர்பாக தெரிவிக்கையில் இந்த நிலைமை குறித்து உலக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கவனம் செலுத்துமாறும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் கவனத்துடன் செயற்படுவதாகவும், இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் சீனாவில் உஹான் மாநிலத்தில் பரவியுள்ளது. சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும், அமெரிக்காவும் நேற்று தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.