இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் ஹராரேயில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது அதன் முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

நான்கு நாள் டெஸ்ட் போட்டியை கட்டாயமாக்கப்போவதற்கான யோசனையை ஐ.சி.சி. முன்வைத்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள்தான் பொருத்தம் என்பதை நிரூபிக்குமாப்போல் மிகவும் நிதானமாக ஸிம்பாப்வே துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான ப்ரின்ஸ் மசுவோர் 3 மணித்தியாலங்களும் 35 நிமிடங்களும் துடுப்பெடுத்தாடி 149 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார்.

மற்றைய ஆரம்ப வீரரான கெவின் கசுஸா 5 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் துடுப்பெடுத்தாடி 214 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆரம்ப விக்கெட்டில் மசுவொரும் கசுஸாவும் 96 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் கசுஸாவும் ஏர்வினும் 68 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

மூன்றாம் இலக்க வீரரும் அனுபவசாலியுமான க்ரெய்க் ஏர்வின் சற்று வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மற்றொரு அனுபவசாலியான ப்றெண்டன் டெய்லர் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 37 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் லஹிரு குமார 69 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.